

தரமான சாப்பாட்டு அரிசியை குறைந்த விலையில் விற்பனை செய்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (மே 1) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் கரோனா நோய் பரவல் தடுப்புக்காக, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களால் மக்கள் பயன் அடைகிறார்கள். அந்த வகையில் மக்களுக்குக் குறைந்த விலையில் தரமான அரிசி கிடைத்திட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
காரணம், கரோனாவால் ஊரடங்கு, போக்குவரத்துக்குத் தடை, அரிசி ஆலைகள் இயக்கப்படாதது, தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாதது போன்றவற்றால் அரிசி விலையானது உயர்த்தப்பட்டிருக்கிறது. அரிசி விலை உயர்வால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி – தை மாதத்தில் அறுவடை செய்த நெல்லிலிருந்து தயாரிக்கப்பட்ட அரிசி பழைய அரிசி. இதன் மூலம் கிடைக்கும் சாதத்தின் அளவு அதிகமாக இருப்பதோடு சாதம் குழையாமலும் இருக்கும்.
ஏற்கெனவே ரூபாய் 1,100-க்கு விற்கப்பட்ட 25 கிலோ கொண்ட சிப்பம் பழைய பொன்னி அரிசி தற்சமயம் 1,300 ரூபாயிலிருந்து 1,400 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 20 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளதில் சன்ன ரக நெல், மோட்டார் ரக நெல் என தனித்தனியாக உள்ளது. இருப்பில் உள்ள இந்த நெல்லை ஒரு முறை மட்டுமே அவியல் செய்வதற்கு அரசு மற்றும் தனியார் அறவை முகவர் நவீன அரிசி ஆலைகளுக்குக் கொடுத்துத் தரமான புழுங்கல் அரிசியாக தயார் செய்ய வேண்டும். தமிழக மக்களின் தேவைக்கேற்ப தரமான அரிசியை தயார் செய்து இருப்பில் வைத்துக்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த தரமான அரிசியை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 20 என விலை நிர்ணயம் செய்து 25 கிலோ கொண்ட அரிசி சிப்பம் ரூபாய் 500 என பொது மக்களுக்கு அரசே நேரடியாக விற்பனை செய்ய வேண்டும். தேவைக்கேற்ப பொதுமக்கள் வாங்கி பயன்பெறுவார்கள்.
அதாவது, இப்போதைய கரோனா பாதிப்பில் உள்ள மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் பொருட்கள் இலவசமாக கொடுப்பதோடு, குறைந்த விலையில் தரமான அரிசியையும் கொடுத்தால் தான் பொதுமக்கள் அனைவரும் பயனடைவார்கள். கடந்த காலங்களில் அரிசி விலை உயர்ந்த போதெல்லாம் அரசு குறைந்த விலையில் தரமான அரசியை இதே போல வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
எனவே, கரோனா பாதிப்பு, ஊரடங்கு ஆகியவற்றால் வேலையில்லாமல், பொருளாதாரம் ஈட்ட முடியாமல் இருக்கின்ற தமிழக மக்களுக்கு தரமான சாப்பாட்டு அரிசியை குறைந்த விலையில் விற்பனை செய்ய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.