Published : 01 May 2020 10:05 AM
Last Updated : 01 May 2020 10:05 AM

40 நாட்களாக நீடிக்கும் ஊரடங்கு முடிவுக்கு வருமா?- நம்பிக்கையுடன் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள்

40 நாட்களாக நீடிக்கும் ஊரடங்கு நாளை மறுதினத்தோடு (மே 3) முடிவுக்கு வரும் எனும் நம்பிக்கையில், பின்னலாடை நிறுவனங்களை சுத்தம் செய்யும் பணியில் திருப்பூரில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில், 6 லட்சம் தொழிலாளர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய 2 லட்சம் தொழிலாளர்கள் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதிக்குப் பிறகு நிறுவனங்கள் இயங்கவில்லை.

இது குறித்து திருப்பூர் பின்னலாடை உரிமையாளர் சரவணன் கூறியதாவது:

"நிறுவனங்களில் வேலை செய்யும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர், ரயில் சேவை இல்லாத காரணத்தால் சொந்த ஊர்களுக்குச் செல்லாமல் திருப்பூரில் தங்கி உள்ளனர்.

வட மாநிலத் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக பணிபுரியும், பல்வேறு பின்னலாடை நிறுவனங்கள் தற்போது சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கி உள்ளன.

கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் வகையில், நிறுவனங்களில் போதிய பாதுகாப்பு மற்றும் சமூக விலகலுடன் இயக்குவதற்குக் காத்திருக்கிறோம். 40 நாட்களாக நீடித்த ஊரடங்கு நாளை மறுதினத்துடன் முடிவுக்கு வரும் என்று நம்புவதால், நிறுவனங்களை சுத்தம் செய்யும் பணி தொடர்கிறது.

அதேசமயம் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்கிற தகவல்களும் இருப்பதால் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x