

அரியலூர் மாவட்டத்தில் காவலர் ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதியாதனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
அரியலூர் காவலர் குடியிருப்பில் உள்ள காவலர்கள் அனைவரின் ரத்த மாதிரிகளும் கடந்த 28-ம் தேதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேகரிக்கப்பட்டு திருச்சி மருத்துவமனைக்கு சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அந்த சோதனை முடிவில், மோப்ப நாய் பிரிவில் பணிபுரிந்து வரும் 36 வயதுடைய காவலர் ஒருவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவர் நேற்று (ஏப்.30) இரவு திருச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கடந்த ஒரு மாதமாக இவர் எந்த பணிக்காகவும் வெளியே செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கையில் காவலருக்குக் கரோனா தொற்று எவ்வாறு வந்தது என மருத்துவர்களும், காவலர்களும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அவரது குடும்பத்தில் உள்ள அனைவரது ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியைச் சேர்ந்த இருவர் கரோனா தொற்றுக்கு திருச்சியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையிலிருந்து வந்த கூலித்தொழிலாளி ஒருவருக்குக் கரோனா தொற்று இருப்பது நேற்று கண்டறியப்பட்டதால், அவரும் திருச்சியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது, காவலர் ஒருவருக்குத் தொற்று உள்ளது உறுதியானதால், அரியலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே, 4 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி அரியலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆகும்.