

தெற்கு அந்தமானை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 2 நாட்கள் ஒரு சில இடங்களில் இடியுடன் மிதமழை பெய்யக்கூடும். தேனி, மதுரை, கன்னியாகுமரி உட்பட சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மழை நேரங்களில்பலத்த காற்றுடன், இடி மற்றும் மின்னல் தாக்கம் காணப்படும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இதற்கிடையே தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் பலமடைந்து தாழ்வு மண்டலமாக மாறும்.
எனினும், தாழ்வானது வடமேற்கு திசையில் நகர்ந்து மியன்மர், வங்கதேசக் கடற்கரையை நோக்கி செல்லக்கூடும். அதனால் தமிழகத்துக்கு எந்த பாதிப்புமில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.