

மீன்பிடி தடை கால நிவாரணம் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடை காலமாக அனுசரிக்கப்படுகிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மீன்பிடி தடை காலத்தில் மீனவ குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் அரசால் வழங்கப்படுகிறது.
தற்போது மீன்பிடி தடை காலம் அமலில் உள்ள திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள மீனவர் குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5 ஆயிரம் வியாழக்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்ட மேற்குக் கடற்கரை பகுதிகளில் உள்ள மீனவர் குடும்பங்களுக்கு ஜூன் மாதம் முதல் நிவாரணம் வழங்கப்படும்.
இத்திட்டத்துக்கு நடப்பு ஆண்டில் அரசால் ரூ.83.55 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர் நலவாரியத்தில் உறுப்பினராக உள்ள மீனவர்களுக்கு சிறப்பு நிவாரணத் தொகையாக தலா ரூ.1,000 வீதம் 4.31 கோடி மீனவர்களுக்கு ரூ.43.10 கோடி, மீனவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.