Published : 30 Apr 2020 10:06 PM
Last Updated : 30 Apr 2020 10:06 PM

கரோனா பாதித்த பகுதிகளில் சமூக விலகலைக் கண்காணித்து பொதுமக்களுடன் உரையாடும் ரோபோ: சென்னை காவல்துறை அறிமுகம்

கரோனா பாதித்த தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் சமூக விலகலுடன் இருப்பதைக் கண்காணித்து அவர்களுடன் உரையாடும் நவீன நடமாடும் ரோபோவை சென்னை போலீஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சென்னை காவல்துறை இன்று வெளியிடுள்ள செய்திக்குறிப்பு:

“சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பல பகுதிகள் (Containment Zones) தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை பெருநகர காவல் துறையினர் மற்றும் சென்னை மாநகராட்சிப் பணியாளர்கள் இரவு பகலாகக் கண்காணித்து வருகிறார்கள்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியின் உள்ளே பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதைக் கண்காணிக்கவும், அவர்களைத் தொடர்பு கொள்ளவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் ரோபோ தாட்ஸ் (Robo Thoughts) என்ற தனியார் நிறுவனத்தினரின் பங்களிப்புடன் சென்னை பெருநகர காவல்துறை ரோபோ இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது.

மேற்படி ரோபோ இயந்திரத்தின் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியின் வெளியிலிருந்து அந்த இயந்திரத்தை இயக்கி அதில் உள்ள கேமரா மூலம் அப்பகுதியின் உள்ளே கண்காணிக்கவும், அங்குள்ள பொதுமக்களுடன் உரையாடி (Two way System) அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

சோதனை முயற்சியாக இன்று மயிலாப்பூரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மீனாம்பாள்புரம் பகுதியில் மயிலாப்பூர் துணை ஆணையர் மேற்பார்வையில் மேற்படி ரோபோ இயந்திரம் இயக்கப்பட்டது. இதன் இயக்கத்தை மேம்படுத்தி மேலும் பல இடங்களில் இயக்க சென்னை பெருநகர காவல்துறை உத்தேசித்துள்ளது”.

இவ்வாறு சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x