

திண்டுக்கல்லைச் சேர்ந்த 95 வயது மூதாட்டி கரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு குணமடைந்து வீடுதிரும்பியுள்ளார்.
திண்டுக்கல் பேகம்பூர் பகுதியை சேர்ந்தவர் 95 வயது மூதாட்டி ஹைரூன்பீவி. இவருக்கு 76 பேரன், பேத்தி மற்றும் கொள்ளுபேரன் பேத்திகள் உள்ளனர்.
இவருக்கு கரோனா வைரஸ் பாதிப்புள்ளது உறுதிசெய்யப்பட்ட நிலையில் இவரை திண்டுக்கல்லில் இருந்து மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி, டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் குணமடைந்து வீடுதிரும்பினார்.
மூதாட்டி ஹைரூன்பீவி கூறுகையில், கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக கூறி என்னை கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச்சென்றனர். நல்ல முறையில் சிகிச்சையளித்து என்னை குணப்படுத்திவிட்டனர்.
என்னை குணப்படுத்திய டாக்டர்கள், செவிலியர்கள், முயற்சி எடுத்த தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வீட்டிற்கு வந்து பேரன் பேத்திகளை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, என்றார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 80 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதில் 72 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். ஒருவர் இறந்துவிட்டார். மீதமுள்ள 7 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.