Published : 30 Apr 2020 08:08 PM
Last Updated : 30 Apr 2020 08:08 PM

உதவி வந்தது; ஊர் திரும்பத்தான் வழி தெரியவில்லை!- வால்பாறை எஸ்டேட்டில் பரிதவிக்கும் பழங்குடிகள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம், பர்கூர் மலைகளில் உள்ள தாமரைக்கரை, ஒசூர் சோழகனைப் பழங்குடி கிராமங்களிலிருந்து வால்பாறை கவர்கல் காபி எஸ்டேட்டுகளுக்கு மூன்று மாதங்கள் முன்பு வேலைக்குச் சென்ற சோளகர் பழங்குடிகள் பொதுமுடக்கம் காரணமாக ஊர் திரும்ப முடியவில்லை. வெவ்வேறு மாவட்டங்களுக்குச் செல்ல அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்காத நிலையில், உணவுப் பொருட்களும் கிடைக்காமல் அவர்கள் அவதிப்பட்டு வருவதாக 'இந்து தமிழ் திசை' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.

இதையடுத்து, வால்பாறை காபி எஸ்டேட்டில் பொதுமுடக்கத்தால் சிக்கித் தவிக்கும் பர்கூர் மலை மக்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கியிருக்கின்றனர் வருவாய்த் துறை அலுவலர்கள். இந்த எஸ்டேட்டுகளுக்கு புதன் மாலை சென்ற உள்ளூர் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் அடங்கிய குழு, உள்ளூர்ப் பிரமுகர்கள் உதவியுடன் 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கியுள்ளது.

இதுகுறித்து, நிவாரணப் பொருட்கள் பெற்ற பழங்குடிகள் சிலர் நம்மைத் தொடர்புகொண்டு பேசினர். அவர்கள் கூறும்போது, “வால்பாறையில் கவர்கல், கல்லார், சத்தி, அகிலேஷ்புரம், தார் எஸ்டேட்டுகளில் 35 பேர், வெள்ளிமலையில் 15 பேர் என குழந்தைகளோடும், சிலர் குழந்தைகளை ஊரில் விட்டு வந்தும் அகப்பட்டுக் கிடக்கிறோம். எங்களைத் தவிர கள்ளக்குறிச்சியிலிருந்து வந்த 15 பேரும் இங்கே இருக்காங்க.

ஒரு மாதம் முன்பு பொதுமுடக்கம் அமலானபோது எஸ்டேட்காரங்க 15 கிலோ ரேஷன் அரிசியும், கொஞ்சம் மளிகைப் பொருளும் கொடுத்தாங்க. அப்புறம், 15 நாள் முன்னாடி அதிகாரிகள் வந்து 5 கிலோ அரிசியும், காய்கனியும் கொடுத்துட்டுப் போனாங்க. ஒரு குடும்பத்துல குழந்தைகளோட சேர்த்து நாலஞ்சு பேர்கூட இருக்காங்க. அவங்களுக்கு இந்த அரிசி பருப்பு நிச்சயம் போதுமானது இல்லை. அதனால கடைகள்ல போய் ஒரு கிலோ அரிசி 70 ரூபாய் வரைக்கும் விலை கொடுத்து வாங்கிட்டு வர வேண்டிய நிலை.

நாங்க நாலு பேர் சேர்ந்து மத்தவங்களுக்கு என்னென்ன வேணும்னு கேட்டு லிஸ்ட் எடுத்துட்டு கடைக்குப் போறோம். இதுக்காக எஸ்டேட் பிக்கப் வேன் எடுத்துட்டு 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கவர்கல், அய்யர்பாடி, ரொட்டிக்கடையில இருக்கிற மளிகைக் கடைக்குப் போகணும். அங்கே பொருட்களை வாங்கிட்டு வந்து பிரிச்சு எடுத்துக்கணும். விறகு, தண்ணிக்கு பிரச்சினையில்லை. எல்லாம் எஸ்டேட்டுல கிடைச்சுடுது.

15 நாள் சுத்தமா எஸ்டேட்டுக்கு வேலைக்குப் போகலை. இப்ப வாரத்துக்கு மூணு நாள் வேலை கொடுக்கறாங்க. 360 ரூபாய் தினக்கூலி. முந்தி வாரத்துக்கு 2,000-க்கு மேல வாங்கிட்டு இருந்த கூலியும் 1,000 ரூபாயா குறைஞ்சுருச்சு. அதை வச்சுத்தான் இங்கே ஒத்தைக்கு ரெண்டு மடங்கு விலை கொடுத்து அரிசி, பருப்பு வாங்கி ஓட்ட வேண்டியிருக்கு. இப்ப வந்த அதிகாரிகள் இந்த உதவிய செஞ்சுட்டுப் போயிருக்காங்க. இப்படியே எத்தனை நாளைக்கு இருக்க முடியும். ஊருக்குப் போக வண்டி ஏற்பாடு பண்ணினால் போதும், போயிருவோம்” என்றனர்.

இவர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய உள்ளூர் வருவாய்த் துறை அலுவலர்களிடம் பேசினோம். “இங்கே 85 குடும்பங்கள் இருக்காங்க. இவர்களுக்கு மட்டும் இதுவரைக்கும் மூன்று முறை நிவாரண உதவிகள் வழங்கிவிட்டோம். அரசிடம் வரும் உதவிகள் தவிர உள்ளூர்ப் பிரமுகர்கள் மூலமாகவும் இயன்றவரை உதவிகள் பெற்று இதை வழங்குகிறோம்.

இப்போது வரை இவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பிட உத்தரவு வரவில்லை. வந்தால் எந்த நிமிடமும் வாகனம் ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கத் தயாராகவே உள்ளோம். மற்றபடி அவர்களின் தேவைகள் என்னென்ன என்பதை அன்றாடம் கண்காணித்து வருகிறோம்” என்றனர்.

நல்லது நடக்கட்டும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x