2 டிரான்ஸ்பார்ம்கள் எரிந்ததால் 3 மாதங்களாக முடங்கிய துணை மின்நிலையம்: சிவகங்கை மாவட்டத்தில் தொடரும் மின்வெட்டு- மக்கள் அவதி

2 டிரான்ஸ்பார்ம்கள் எரிந்ததால் 3 மாதங்களாக முடங்கிய துணை மின்நிலையம்: சிவகங்கை மாவட்டத்தில் தொடரும் மின்வெட்டு- மக்கள் அவதி
Updated on
1 min read

சிவகங்கை துணை மின்நிலையத்தில் 2 டிரான்ஸ்பார்ம்கள் எரிந்ததால் 3 மாதங்களாக முடங்கியுள்ளது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து மின்வெட்டு நிலவுகிறது.

சிவகங்கையில் திருப்பத்தூர் ரோட்டில் 110 கே.வி. துணை மின்நிலையம் உள்ளது. இதன்மூலம் சிவகங்கை நகர், இடையமேலூர், தமராக்கி, கூட்டுறவுப்பட்டி, மலம்பட்டி, சுந்தரநடப்பு, சோழபுரம், மேலப்பூங்குடி, வாணியங்குடி, கீழக்கண்டனி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் ஜன.14-ம் தேதி நள்ளிரவு மொத்தமுள்ள மூன்று 10 கே.வி.ஏ. டிரான்ஸ்பார்ம்களில் 2 எரிந்தன. மூன்று மாதங்களாக ஒன்று மட்டுமே இயங்கி வருகிறது. இதனால் முழுமையாக மின்விநியோகம் செய்ய முடியவில்லை.

இதையடுத்து சிவகங்கை துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு மதகுபட்டி, காளையார்கோவில், மானாமதுரை, பூவந்தி, இடையமேலூர் உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் சிவகங்கை துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகள் மட்டுமின்றி மதகுபட்டி, காளையார்கோவில், மானாமதுரை, பூவந்தி, இடையமேலூர் பகுதிகளிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கியுள்ள மக்களுக்கு தொடர் மின்வெட்டு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் ஜி.பாஸ்கரன், ஆட்சியர் ஜெயகாந்தன் தலையிட்டு சிவகங்கை பகுதியில் மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து மின்வாரியத்துறையினர் கூறுகையில், ‘பெரும்பாலான மின்வாரிய அதிகாரிகள் வெளியூர்களில் இருந்து வருகின்றனர். மேற்பார்வை பொறியாளரை தவிர மற்றவர்கள் சிவகங்கையில் தங்குவதில்லை. இதனால் மின்தளவாட பொருட்கள் பழுதடைந்தாலும் உடனுக்குடன் மாற்றுவதில்லை,’ என்று கூறினர்.

மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘2 மின்மாற்றிகள் ஒரே நேரத்தில் எரிந்துவிட்டன. புதிதாக பொருத்த கோடிக்கணக்கில் செலவாகும். இதுகுறித்து தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம்,’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in