Last Updated : 30 Apr, 2020 05:38 PM

 

Published : 30 Apr 2020 05:38 PM
Last Updated : 30 Apr 2020 05:38 PM

முதுமையால் உயிரிழந்த ஆதரவற்ற நபர்; இறுதிச் சடங்கு பணிகளை முன்னின்று நடத்திய பேராவூரணி எம்எல்ஏ

முதுமையால் உயிரிழந்த ஆதரவற்ற நபரை நல்லடக்கம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்தார் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் மா.கோவிந்தராசு.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம் மகன் முருகன் (78). இவரது மனைவி அஞ்சம்மாள் (68). இவர்களுக்குப் பிள்ளைகள் யாரும் இல்லை. ஆதரவற்ற நிலையில், பல்வேறு ஊர்களில் பிழைப்பு நடத்தி வந்த இவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக பேராவூரணியில் தங்கியிருந்து, நீலகண்டப் பிள்ளையார் கோயில் வாசலில் யாசகம் பெற்று வாழ்க்கையைக் கழித்து வந்தனர்.

இந்நிலையில், கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கோயில் பூட்டப்பட்டதால், வருமானமின்றித் தம்பதியர் பேருந்து நிலையத்தில் தஞ்சமடைந்தனர். பேரூராட்சி, வருவாய்த்துறை, சமூக ஆர்வலர்கள் உதவியால், அங்கு தங்கியிருந்த மேலும் சில ஆதரவற்ற நபர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று (ஏப்.30) அங்கிருந்த கழிவறைக்குச் சென்ற முதியவர் முருகன் மயங்கி விழுந்துள்ளார். கழிவறைக்குச் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பாததால் அஞ்சம்மாள் தேடிச் சென்றபோது, முருகன் மயங்கி விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.

இறந்த கணவரின் உடலை வைத்துக் கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல், அவரது மனைவி அஞ்சம்மாள் தவித்துள்ளார்.

இறந்த முருகனின் உடல் அருகே அவரது மனைவி அஞ்சம்மாள்.

இதுகுறித்துத் தகவல் அறிந்த பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் மா.கோவிந்தராசு, உடனடியாக பேருந்து நிலையம் விரைந்து வந்தார். பின்னர் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார்.

இதையடுத்து அங்கு, காவல்துறை உதவி ஆய்வாளர் இல.அருள்குமார், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.தமிழ்வாணன், கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல், கிராம உதவியாளர் சக்திவேல் ஆகியோர் விரைந்து வந்தனர்.

உடனடியாக வேட்டி, மாலை கொண்டு வரப்பட்டு, இறந்து கிடந்த முதியவருக்கு அணிவித்து, சட்டப்பேரவை உறுப்பினர் மா.கோவிந்தராசு மரியாதை செலுத்தினார். மேலும், பெரியவரின் மனைவிக்கு ஆறுதல் கூறி, பண உதவியும் அளித்தார்.

மேலும், சட்ட நடைமுறைகளை விரைவாக முடித்து உடலை மாலை பேராவூரணி மயானத்தில் அடக்கம் செய்ய அனைத்துப் பணிகளையும் முன்னின்று நடத்தினார் எம்எல்ஏ.

கரோனா வைரஸ் பீதி காரணமாக பலரும் வெளியே வரத் தயங்கும் நிலையில், ஆதரவற்ற நபரின் இறுதிச்சடங்கு நல்ல முறையில் நடக்க நடவடிக்கை எடுத்த சட்டப்பேரவை உறுப்பினரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x