

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்புவதற்காக மருத்துவப் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள வெளிமாநில மாணவர்கள், தொழிலாளர்களை அவர்களது மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கலாம் என, மத்திய அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
அவ்வாறு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் வடமாநிலங்களை சேர்ந்த 8,500 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இவர்கள் அந்தந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களில் விருப்பமுள்ளவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக அனைத்து வெளிமாநில தொழிலாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் வெளிமாநில தொழிலாளர்கள் பட்டியல் தொழிலாளர் நலத்துறை மூலம் சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வெளிமாநில தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக ஒரு மருத்துவர், ஒரு லேப் டெக்னீசியன் மற்றும் ஒரு பணியாளர் என மூன்று பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று மருத்துவ பரிசோதனையை தொடங்கியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மட்டும் சுமார் 2000 தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து வருகின்றனர்.
காய்ச்சல், சளி, இருமல் போன்றவை உள்ளதா என பரிசோதனை செய்யப்படுகிறது. யாருக்காவது கரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனையை தொடர்ந்து விருப்பப்படும் வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.