

மதுவிலக்குப் போராளி சசிபெருமாளின் மரணம் அடைந்த நிலையில், அவரது குடும்பத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, நீண்டகாலமாக தனி மனிதனாக போராடிவந்த காந்தியவாதி சசிபெருமாளின் மறைவு, அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகப்பெரிய இழப்பாகும்.
எவ்வித நிவாரணம் வழங்கினாலும் அதை ஈடுகட்ட இயலாது. இருந்தாலும் அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு தற்போதைய தேவைக்கு உதவியாக ஒரு லட்சம் ரூபாய் வழங்குகிறேன்.
நான் வழங்கியுள்ள நிதி பெரிதல்ல, ஆனாலும் அக்குடும்பத்தின் சூழ்நிலை கருதி இதை வழங்க உள்ளேன். எந்த சூழ்நிலையிலும் நிதியுதவி மட்டுமே அவருடைய குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்காது. தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவது மட்டுமே அவருக்கு செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலியாகும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.