

தமிழகத்தில் அதிகமாக திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பீடி சுற்றும் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்து பீடி உற்பத்தி பணிகளில் ஈடுபட அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதனால் 2.51 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.
தமிழகம் முழுவதும் கரோனா வைரஸை கட்டுபடுத்துதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் மற்றும் ஊரடங்கு குறித்து முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நேற்று காணொலிகாட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, திருநெல்வேலி மாவட்டத்தில் கணிசமாக உள்ள பீடித்தொழிலாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்து பீடி சுற்றும் தொழிலை மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்திருந்தார்.
அதை ஏற்று திருநெல்வேலி மாவட்டத்தில் பீடி சுற்றும் தொழிலாளர்கள் வீடுகளில் இருந்து பீடி உற்பத்தியை மேற்கொள்ள ஏற்பாடுகளை செய்வதற்கு முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமிழகத்திலேயே அதிகபட்சமான பீடி சுற்றும் தொழிலாளர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளனர். இம்மாவட்டத்தில் திருநெல்வேலி, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பீடி சுற்றும் தொழில் பிரதானமாக உள்ளது.
தற்போது வீடுகளில் இருந்தபடி பீடி சுற்றும் தொழிலை மேற்கொள்ள அரசு ஏற்பாடுகளை செய்துள்ளதால் திருநெல்வேலியில் 53030 பேர், மேலப்பாளையத்தில் 55186 பேர், ஏர்வாடியில் 16514 பேர், அம்பாசமுத்திரத்தில் 3604 , சேரன்மகாதேவியில் 37973 பேர் என்று 12388 ஆண் தொழிலாளர்களும், 2,38,776 பெண்களுமாக மொத்தம் 2,51,164 பீடி சுற்றும் தொழிலாளர்களும் பயன் பெறுவார்கள். பீடி சுற்றுவதற்கு தேவையான மூலப்பொருட்களை அவரவர் வீடுகளுக்கு கொண்டு செல்லவும், இத்தகைய தொழில் புரிபவர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.