

கரோனா தொற்று தொடங்கியதிலிருந்து ராஜ்நிவாஸிலிருந்து கிரண்பேடி வெளியே வருவதில்லை, ஆய்வில் ஈடுபடுவதில்லை என்று அமைச்சர் புகாருக்கு கிரண்பேடி விளக்கம் தந்துள்ளார். அதேபோல், ஐபிஎஸ் ஓய்யூவூதியத்தையும், ஆளுநர் ஊதியத்துடன் பெறுவதாக எழுந்த புகாருக்கும் பதில் தந்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதற்கான விளக்கங்களை தந்துள்ளார்.
குறிப்பாக, கரோனா தொற்று தொடங்கியதிலிருந்து வார இறுதி ஆய்வுகளை ரத்து செய்துவிட்டு ராஜ்நிவாஸிலிருந்து வெளியே வரவே இல்லை என்று குற்றச்சாட்டு குறித்து பதிலளித்துள்ள கிரண்பேடி, "மத்திய அரசு உத்தரவுப்படி சமூக இடைவெளி மற்றும் இதர முன்னெச்சரிக்கைகளை பின்பற்றுகிறோம். மக்கள் குறைகளை மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் வழியே பெறுகிறேன். தொலைபேசி வழியாக உரையாடுகிறேன். அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பிக்கிறேன். மாநில சூழல்களை உன்னிப்பாக கவனிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
துணைநிலை ஆளுநர், ஐபிஎஸ் ஓய்வூதியத்தையும், ஆளுநர் ஊதியத்தையும் பெறுவதாக எழுந்த புகார்கள் குறித்துக் கூறுகையில், "இரண்டையும் பெறுவதில்லை. மத்திய அரசு விதிப்படி ஓய்வூதியத்தைத் துணைநிலை ஆளுநருக்கான ஊதியத்தில் இருந்து கழித்து விட்டே தரப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
மீனவர்களுக்குத் தரப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை வயதான மற்றும் தொழிலில் ஈடுபட முடியாதோருக்கும் தர அமைச்சர் கோரினார். "ஆனால் அதை ஏற்க முடியாது. முழு நேர மீனவர்களுக்கு மட்டுமே நிவாரணம்" என கிரண்பேடி பதில் தெரிவித்துள்ளார்.