விலகியிருக்க வேண்டிய சூழலில் ஒன்றிணைவோம் வா என அரசியல் செய்கிறார் ஸ்டாலின்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு

விலகியிருக்க வேண்டிய சூழலில் ஒன்றிணைவோம் வா என அரசியல் செய்கிறார் ஸ்டாலின்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு

Published on

கரோனா வைரஸால் பிரதமர், முதல்வர் உட்பட அனைவரும் விலகி இருப்போம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் ஒன்றிணைவோம் வா என்று அனைவரையும் அழைத்து அரசியல் செய்வதாக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கூறினார்.

விருதுநகர் மாவட்டத்தில் 75 இந்து சமய அறநிலைத்துறை கோயில்கள் பணியாற்றும் 517 அர்ச்சகர், பணியாளர்களுக்கு தலா 20 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது.

பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், "நாட்டில் அரசியல் பேசக்கூடிய தருணம் இப்போது கிடையாது.

வீட்டில் இரு விலகி இரு தனித்திரு என்று தான் பாரதப் பிரதமர், தமிழக முதல்வர் உட்பட உலக தலைவர்கள் கூறிவருகின்றனர்.

உலகத் தலைவர்கள் அனைவரும் விலகி இரு என்று கூறிவரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் ஒன்றிணைவோம் வா என்று கூறி அனைவரையும் அழைத்துக் கொண்டு அரசியல் செய்து வருகின்றார்.

ஸ்டாலினைப் பொறுத்தவரையில் கரோனா வைரஸ் வைத்து அரசியல் தான் செய்கிறாரே தவிர மக்களைக் காப்பாற்ற ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அவரை செல்போனில் 2 நாளில் 2 லட்சம் பேர் தொடர்பு கொண்டனர் என்பது கட்டுக்கதை.

அதிமுகவினர் உதவி செய்து வருவது போல் திமுகவினரும் உதவி செய்ய வேண்டுமென்று ஸ்டாலின் கூற வேண்டுமே தவிர, அரசை குறைகூறிக் கொண்டே இருக்கக்கூடாது.

பிரச்சினைகள் வரும்போது பொதுமக்கள் தேடி வருவது ஆலயங்கள் கோயில்களைதான். இறைவனுக்கு செய்கின்ற தொண்டு ஏழைகளுக்கு செய்கின்ற தொண்டுதான்.

எனவே இந்த நேரத்தில் ஜோதிகா கூறிய கருத்துக்கள் தவிர்த்திருக்க வேண்டும். கடவுள் இல்லை என்று கூறும் நாத்திகர்கள் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்" என்ற எண்ணம் கண்டிப்பாக வராது என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in