Published : 30 Apr 2020 03:25 PM
Last Updated : 30 Apr 2020 03:25 PM

வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் தாயகம் திரும்ப விருப்பமா? பதிவு செய்ய இணையதளம் தொடங்கியது தமிழக அரசு

வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் தாயகம் திரும்ப உதவும் வகையில் இணையதளம் ஒன்றை தமிழக அரசு தொடக்கியுள்ளது. இதன் மூலம் விண்ணப்பித்து அவர்கள் தாயகம் திரும்பலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்திலிருந்து வெளிநாடுகளில் சென்று வசிப்போர், கல்வி பயிலச் சென்ற மாணவர்கள், சுற்றுலா சென்றோர், பணியாற்றுவோர் லட்சக்கணக்கில் உள்ளனர். குறிப்பாக வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றவர்கள் அங்கு சிக்கித் தவிக்கின்றனர். நோய்த்தொற்று அதிகரித்துள்ள நிலையில் தாயகம் திரும்ப அவர்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில் அதை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என் எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் வெளிநாட்டில் சிக்கியிருப்போர், வசிப்போர் தாயகம் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக இணையதளம் ஒன்றை தமிழக அரசு அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்ப விருப்பம் உள்ளவர்கள் அதில் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

அதன் விவரங்களைச் சேகரித்து தாயகம் திரும்பும் தமிழர்களை தனிமைப்படுத்த உரிய ஏற்பாடுகளை தமிழக அரசு செய்யும். இதன் பின்னர் அவர்களை தமிழகம் அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக nonresidenttamil.org என்கிற இணையதளப் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசுத்தரப்பில் வெளியிட்டுள்ள தகவல்:

”இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு 25.03.2020 முதல் அமலில் இருந்து வருகிறது. இதனால், சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் நம் நாட்டிற்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு வெளி நாடுகளில் இருக்கும் தமிழர்களில், உடனடியாக தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்புகிறவர்களின் நலனுக்காகவும், அவர்களின் குடும்பத்தினரின் நலனை காத்திடும் நோக்கிலும், அவர்களது எண்ணிக்கையினை அறியும் வகையிலும், தமிழ்நாட்டிற்குத் திரும்புகிறவர்களுக்கு தனிமைப்படுத்துதல் வசதிகள் ஏற்படுத்திடவும், அவர்களைப் பற்றிய தகவல்களை பெறுவதற்காக இணைய பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது”.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து திரும்பும் எண்ணம் உள்ளவர்கள் இந்தப் பக்கத்தில் உடனே சென்று தங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யலாம். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் உடனடியாகத் தமிழகம் திரும்பவும் அவர்கள் குடும்பத்தினர் நலனுக்காக இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x