Published : 30 Apr 2020 03:29 PM
Last Updated : 30 Apr 2020 03:29 PM

ஓய்வுபெறும் ஓட்டுநர், நடத்துநர்களின் வீட்டுக்கே சென்று பிரியா விடை கொடுக்கும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள்

பணி ஓய்வு பெறும் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அதிகாரிகளே வீடு தேடிச் சென்று சால்வை, மாலை அணிவித்து பணப் பலன்களை அளித்து பிரியா விடை கொடுத்து வருகிறார்கள்.

அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு அவர்கள் பணி ஓய்வுபெறும் நாளானது மறக்கமுடியாத அனுபவங்களின் தொகுப்பாக இருக்கும். வழக்கமாக, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துநர்கள் ஓய்வுபெறும் நாளில் அந்தந்த பணிமனைகளில் பிரிவு உபச்சார விழா நடத்தப்படும்.

சம்பந்தப்பட்ட பணிமனையின் கிளை மேலாளர்கள் உள்ளிட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தலைமையில் நடக்கும் இந்த விழாவில், அதிகாரிகளும் சக பணியாளர்களும் ஓய்வுபெறும் பணியாளரின் பணிக்காலச் சேவைகளை நினைவுகூர்ந்து பாராட்டியும் வாழ்த்தியும் பேசுவார்கள். நிறைவாக அந்தப் பணியாளருக்கான பணி நிறைவுச் சான்றிதழ் மற்றும் பணப் பலன்களுக்காக காசோலை உள்ளிட்டவற்றை அதிகாரிகள் வழங்குவார்கள். அதன் பிறகு, ஓய்வுபெறும் ஓட்டுநர் அல்லது நடத்துநரை சக பணியாளர்கள் பேருந்தில் ஏற்றி அவரை அவரது வீடு வரை அழைத்துச் சென்று பிரியாவிடை கொடுத்துவிட்டு வருவார்கள்.

ஆனால், இப்போது கரோனா காலம் என்பதால் இந்த பிரிவு உபச்சார விழாக்கள் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டு வருகின்றன. பணிமனைகளில் பிரிவு உபச்சார விழா நடத்துவதற்குப் பதிலாக, போக்குவரத்துக் கழகத்தின் கோட்ட மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், ஓய்வுபெறும் பணியாளரின் வீட்டுக்கே சென்று சால்வை, சந்தன மாலைகள் அணிவித்து அவர்களுக்கான பணி நிறைவுச் சான்றிதழ் மற்றும் காசோலைகளை வழங்கி வருகிறார்கள். கரோனா அச்சம் நீங்கி நிலைமை சகஜமாகும் வரை இதே நடைமுறை கடைப்பிடிக்கப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

அதேசமயம், பிரிவு உபச்சார விழாக்கள் இப்படி எளிமையாக நடப்பதால், சக தோழனை வாயாற வாழ்த்தி வழியனுப்ப முடியவில்லையே என்ற ஆதங்கமும், சக நண்பர்கள் சூழ பிரிவு உபச்சார விழாவை நடத்த முடியவில்லையே என்ற ஏக்கமும் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் மனதின் ஒரு ஓரத்தில் இருக்கத்தான் செய்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x