

ஊரடங்கில் கள்ள மது விற்பனை தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் உத்தரவுப்படி டிஜிபி நியமித்த தனி அதிகாரி உத்தரவை புதுச்சேரி அரசு ரத்து செய்துள்ளது.
புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டவுடன் மதுபானக்கடைகள் மூட உத்தரவிடப்பட்டது. ஆனால், கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை அதிக அளவில் நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து, இரு வாரங்களுக்குப் பிறகுதான் கடைகள், குடோன்கள் சீல் வைக்கப்பட்டன. பெரும்பாலான மதுபானக்கடைகள் அரசியல் சார்புடையோரால் நடத்தப்பட்டு வருகின்றன. இச்சூழலில் மதுபானம் கூடுதல் விலைக்கு சந்தையில் கள்ளத்தனமாக கிடைப்பதாக புகார்கள் வந்ததால் மதுக்கடையிலுள்ள சரக்குகள் சரிபார்க்க ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டன.
மதுபான விற்பனை தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு அதன் தலைவராக முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால், ஆளுநர் உத்தரவுப்படி டிஜிபியால் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின.
மேலும், கணக்குகள் சரியாக இல்லாததால் 90 மதுபானக்கடைகளின் உரிமங்கள் ரத்தாகியுள்ளன. அப்போது மதுக்கடைக்கு ஆய்வுக்குச் சென்ற தாசில்தார் கார்த்திகேயன், மதுபாட்டில்களை எடுத்துச் சென்றதாக அவர் உட்பட 8 அரசுப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பில் இருந்த போலீஸாரும் கைது செய்யப்பட்டனர். அப்போது தாசில்தார் தாக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரித்து வரும் 6-ம் தேதிக்குள் அறிக்கை தர ஆட்சியர் அருணுக்கு முதல்வர் நாராயணசாமி நேற்று (ஏப்.29) இரவு உத்தரவிட்டார்.
தற்போது ஆளுநர் கிரண்பேடி உத்தரவுப்படி அமைக்கப்பட்ட தனிக்குழுவை புதுச்சேரி அரசு கலைத்து, அதன் தலைவரான ராகுல் அல்வாலை மீண்டும் சட்டம் ஒழுங்கு முதுநிலைக் காவல் பணியாளராக்கியுள்ளது. அதன்படி, அவர் இன்று பொறுப்பேற்றார். தற்போது சட்டம் ஒழுங்கு காவல் கண்காணிப்பாளராக இருந்த மகேஷ்குமார் பர்ன்வால் மீண்டும் முன்பு வகித்த காரைக்கால் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் பணிக்குத் திரும்பினார். காரைக்காலில் பொறுப்பு வகித்த ரட்சனா சிங் மீண்டும் புதுச்சேரி போக்குவரத்து காவல் கண்காணிப்பாளராகியுள்ளார்.
இந்நிலையில், அரசு மதுபானக்கடை உரிமையாளர்களுக்கு கலால்துறை இணை ஆணையர் சஷ்வத்சவ்ரவ் வெளியிட்டுள்ள உத்தரவில், "கடந்த 2018-19, 2019-20 ஆண்டுகளுக்கான ஆண்டு விற்பனைக் கணக்கை உடனடியாக கலால்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஒப்படைக்காவிட்டால் கலால்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
சட்ட விரோத மது விற்பனையால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்திருந்தார். ஆனால், அதை முன்னாள் எம்.பி.யும் பேராசிரியரியருமான ராமதாஸ் மறுக்கிறார். அவர் கூறுகையில், "மதுபானங்கள் வெளியில் இருந்து வாங்கும்போதே அதற்கான கலால் வரி மற்றும் விற்பனை வரி போன்றவற்றை மதுக்கடை உரிமையாளர்கள் அரசுக்குச் செலுத்தி அது வருவாயாக புதுவை அரசுக்கு வருகிறது.
எனவே, ஊரடங்கின்போது மதுக் கடைகளிலும், குடோன்களிலும் இருக்கும் மது பொருளுக்குரிய வருவாய் அரசுக்கு ஊரடங்குக்கு முன்பே வந்துவிட்டது. அந்த மதுபானங்களைக் கடையில் விற்றாலும் கள்ளத்தனமாக விற்றாலும் அரசுக்கு எந்த வருவாய் இழப்பும் இல்லை.
ஊரடங்குக்குப் பிறகு மதுக்கடைகள் மதுபானங்களை வெளியிலிருந்து வாங்காததால் கடந்த 34 நாட்களில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மை. இந்த இழப்பு சுமார் ரூபாய் 100 கோடியாகும். இந்த இழப்புக்கும் சட்டவிரோத மது விற்பனைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ஆனால், கள்ளத்தனமாக மதுவை விற்றவர்கள், கொள்ளை லாபம் பெற்றிருக்கின்றார்கள் என்பது உண்மை. மதுக்கடை விற்பனையாளர்களில் சிலர், மதுக்கடைகளில் வேலை செய்வோர் சிலர் கரோனா காலத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்திருப்பது பெரிய குற்றமாகும். அவர்கள் மீது சட்டம் என்ன சொல்கிறதோ அந்த நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த அன்றே தேர்தல் நேரத்தில் செய்வதுபோல எல்லா மதுக்கடைகளுக்கும் சீல் வைத்திருந்தால் சட்ட விரோதமான மது விற்பனையும் அதனைத் தொடர்ந்து கைது நடவடிக்கையும் இருந்திருக்காது. இந்த மாபெரும் தவறுக்கு யாரைத் தண்டிப்பது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.