Last Updated : 30 Apr, 2020 12:42 PM

Published : 30 Apr 2020 12:42 PM
Last Updated : 30 Apr 2020 12:42 PM

மருந்தே இல்லாமல் கரோனா நோயாளிகள் எப்படி குணமாகிறார்கள்?- அரசு மருத்துவர் விளக்கம்

கரோனா நோய்த் தொற்றுக்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் தினமும் சுமார் 60 பேர் வரைக்கும் குணமாகி வீடு திரும்பி வருகிறார்கள். மாநிலம் முழுவதும் இதுவரையில் 1,210 பேர் குணமாகியிருக்கிறார்கள். ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் சிகிச்சை பெற்ற அத்தனை நோயாளிகளுமே வீடு திரும்பிவிட்டார்கள். மருந்தே கண்டுபிடிக்கப்படாத நிலையில், எப்படி நடக்கிறது இந்த மேஜிக்? சிவகங்கை அரசு மருத்துவர் ஏ.பி.ஃபரூக் அப்துல்லாவுடன் பேசலாம்.

மருந்தே கண்டுபிடிக்கப்படாத நிலையில், கரோனா நோயாளிகள் எப்படிக் குணமாகிறார்கள்?
கரோனா நோய்த்தொற்றில் நான்கு வகை இருக்கிறது. அறிகுறியே இல்லாமல் கிருமித்தொற்று மட்டும் உள்ளவர்கள் முதல் வகை. காய்ச்சல், சாதாரண சளி, இருமல் மாதிரியான லேசான அறிகுறி இருப்பவர்கள் இரண்டாம் வகை. இவர்களை எல்லாம் இரண்டே வாரத்திற்குள் குணப்படுத்திவிடலாம். மூன்றாவது வகை, நுரையீரல் வரைக்கும் கிருமி பரவி, பாதிக்கப்பட்டவர்கள். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து, நெபுலைசேஷன் எனப்படும் புகை மூலம் மருந்து அளிக்கும் சிகிச்சை தரப்படும். நிமோனியா எனும் தொற்றுக்கு ஆளாகியிருந்தால் ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படும். இது மிதமான (moderate disease) வகை தான்.

ஆனால், நுரையீரல் தொற்று தீவிரமானவர்கள், அதாவது நான்காம் வகையினர் தீவிரமாக கவனிக்கப்பட வேண்டியவர்கள். ஐசியுவில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டியதிருக்கும். அதிலும் கூட கிரிட்டிக்கல் என்று சொல்லப்படும் கவலைக்கிடமான நிலைக்குச் செல்வோர் 1 முதல் 2 சதவிகிதம்தான். அவர்களுக்கு செயற்கை சுவாசக் கருவி கட்டாயம் தேவைப்படும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 90 சதவீதம் பேர் எந்த அறிகுறிகளும் இல்லாதவர்கள்தான். கிருமித் தொற்று இருந்தாலும், ஏதாவது அறிகுறிகள் இருந்தால்தானே அதற்கேற்ப சிகிச்சை தர முடியும்? எனவே, இவர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எனும் மாத்திரையும், ஒஸல்ட்டாமிவிர் எனும் வைரஸ் கொல்லி மாத்திரையும் கொடுக்கப்படுகிறது. வைரஸுக்கு எதிரான அந்த மாத்திரையுடன், கபசுரக் குடிநீரையும் சேர்த்து கூட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கூடவே, நல்ல சத்தான உணவு. இதன் மூலம் வைரஸ் தொற்றை அடுத்த கட்டத்துக்குப் போக விடாமல் தடுக்கிறார்கள்.

அதேநேரத்தில் அவர்கள் மீதான கண்காணிப்பு கூடுதலாக இருக்கும். ஒவ்வொரு நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை காய்ச்சல் இருக்கிறதா இல்லையா என்று சோதிக்கப்படும். ரத்த அழுத்தம் பார்க்கப்படும். சர்க்கரை நோய் இருந்தால், அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான மருந்துகள் வழங்கப்படும். இப்படி நோயை முற்றவிடாமலேயே சிகிச்சை அளிப்பதால்தான் பெரும்பாலோனார் குணமாகிவிடுகிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சீரியஸான சிகிச்சை தேவைப்படுவது 2 சதவீதம் பேருக்குத்தான்.

ஆனால், குணமாகிவிட்டார்கள் என்று வீட்டிற்கு அனுப்பப்பட்ட சிலருக்கு மீண்டும் நோய்த்தொற்று இருப்பதாகத் தகவல்கள் வருகிறதே?
அதற்கான வாய்ப்பு ரொம்பவே குறைவு. அதுவும் சீனா, தென்கொரியா போன்ற நாடுகளில்தான் அப்படியான தகவல் பதிவாகியிருக்கிறது. இந்தியாவில் அப்படி யாருக்கும் மறுபடியும் தொற்று ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. எனவே, நம் நாட்டைப் பொறுத்தவரையில் அது பெரிய பிரச்சினையாக இருக்காது என்றே நம்புகிறேன். உலகம் முழுவதும் இந்தப் புதிய நோய்த் தொற்று பரவ ஆரம்பித்து 4 மாதங்களே ஆகியிருப்பதால் மறுதொற்று ஏற்படும் வாய்ப்பு குறித்து இப்போதே கருத்து கூறுவது சரியாக இருக்காது. ‘கோவிட்-19’ நோயைப்பற்றி நாம் தொடர்ந்து எதிர்காலத்தில் ஆய்வுகள் செய்வதன் மூலம் மறு நோய்த் தொற்றுக்கான சாத்தியங்கள் உள்ளனவா எனக் கண்காணிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று குறைந்திருப்பதாக நினைக்கிறீர்களா?
இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் மீள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கை சதவீதம் குறைவாகவும் இருக்கிறது. அதாவது, பாதிப்பின் அளவைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டோம். கேரளா இரண்டு, மூன்று வாரத்துக்கு முன்பே இந்த நிலைக்கு வந்துவிட்டார்கள். அதாவது அங்கே சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையைவிட குணமாகிச் சென்றோரின் எண்ணிக்கை அதிகம். கிட்டத்தட்ட அதே நிலைக்கு இப்போது தமிழ்நாடும் வந்துவிட்டது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களில்தான் பிரச்சினை தீவிரமாக இருப்பதாகத் தெரிகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் நாடு தழுவிய பொதுமுடக்கம் நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது. இந்த 43 நாட்களாக பொதுமுடக்கத்தை அமல்படுத்தப்படாமல் இருந்திருந்தால், இந்நேரம் லட்சக்கணக்கில் நோய்த்தொற்றாளர்கள் உருவாகியிருப்பார்கள். ஆயிரக்கணக்கில் மரணங்கள் ஏற்பட்டிருக்கும் என்பது திண்ணம்.

இவ்வாறு மருத்துவர் ஏ.பி.ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x