

ஓய்வு பெற்ற பிறகும் அநீதிகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி கூறியுள்ளார் .
பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க முன்னாள் மத்திய குழு உறுப்பினர்கள் சங்கத்தின் முதலாவது பொது மாநாடு சென்னை வேப்பேரியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆர்.காந்தி பேசியதாவது:
பணியில் இருக்கும் போது தொழிற்சங்கம் மூலம் உரிமைகளுக்காகப் போராடியவர்கள், ஓய்வு பெற்ற பிறகும் சங்கம் அமைத்து செயல்படுவது பாராட்டுக்குரியது. பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டோம், இனி என்ன இருக்கிறது என ஓய்ந்து விடாமல் அநீதிகளுக்கு எதிராகப் போராட வேண்டும். தொழிலாளர் பிரச்சினைகள் மட்டுமின்றி சமூக நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க முன்னாள் மத்திய குழு உறுப்பினர்கள் சங்கத்தின்‘தொலைநோக்கு’ என்ற மாத இதழ் வெளியிடப்பட்டது. சென்னை கோவூரில் செயல்பட்டு வரும் ‘பிரேம வாசம்’என்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் இல்லத்துக்கு சங்கத்தின் தலைவர் எஸ்.பி.ராமன் உதவிப் பொருட்களை வழங்கினார்.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் (ஏஐஐஇஏ) முன்னாள் செயலாளர் ஆர்.கோவிந்தராஜன், பாரத ஸ்டேட் வங்கி அலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் எம்.தர்மராஜன், சங்கத்தின் செயலாளர் வி.ஆர்.உதயசங்கர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.