Published : 30 Apr 2020 10:16 AM
Last Updated : 30 Apr 2020 10:16 AM

கரோனா நோயாளிகள்: பாரம்பரிய மருத்துவ முறைகளின்படி 15 நாட்களுக்கு சிகிச்சை அளித்துப் பரிசோதிக்கலாம்; முதல்வருக்கு விஜயகாந்த் கோரிக்கை

விஜயகாந்த்: கோப்புப்படம்

சென்னை

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பாரம்பரிய மருத்துவ முறைகளின்படி, 15 நாட்களுக்கு சிகிச்சை அளித்துப் பரிசோதிக்கலாம் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, விஜயகாந்த் இன்று (ஏப்.30) வெளியிட்ட அறிக்கையில், "சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. பல உயிர்களை பலி வாங்கியுள்ள இந்த தொற்றுக்கு, இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், தமிழகம் முழுவதும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் நோய் பாதிப்பு அதிகரித்துக்கொண்டேவருகிறது.

எனவே, கரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பாரம்பரிய மருத்துவமான ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்றவற்றை நாம் நிச்சயமாக கவனத்தில் கொள்ள வேண்டும். மருத்துவர் தணிகாச்சலம் போன்றவர்கள் தொடர்ந்து இதை வலியுறுத்தி வரும் வேளையில், 'சிறு துரும்பும் பல் குத்த உதவும்' என்ற பழமொழிக்கேற்ப, இந்த காலக்கட்டத்தில் எதையும் அலட்சியமாகக் கருதாமல், ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவர்களை அழைத்துக் கலந்தாலோசனை செய்து அவர்கள் கூறும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்து கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு 15 நாட்களுக்கு சிகிச்சை அளித்து, பரிசோதிக்கலாம்.

அவ்வாறு செய்யும்போது, அதில் பலன் இருந்தால் அந்த சிகிச்சை முறையை தொடரலாம். மேலும், இதன் மூலம், தமிழர்களின் பாரம்பரியமான சிகிச்சை முறையை உலகுக்கும் நாம் கொண்டு செல்ல முடியும். ஏனெனில், கபசுரக்குடிநீர், நிலவேம்பு கசாயம் வேப்பிலை, மஞ்சள் சுடுதண்ணீர், உப்பு, இவையணைத்தும் தொற்றிலிருந்து காப்பாற்றும் என்பது நம்பிக்கை.

அதுபோல், கரோனாவும், ஒரு வைரஸ் தொற்றுதான். எனவே, இதற்கு நிச்சயம் பாரம்பரிய சிகிச்சைகள் பலன் அளிக்கும் என நம்பிக்கை இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் பாரம்பரிய மருத்துவ சிகிச்சை மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளது என்று அறிய வந்துள்ளோம். எனவே, பாரம்பரிய மருத்துவர்களை கலந்து ஆலோசித்து, அந்த மருத்துவ சிகிச்சையை, தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு அளிக்க வேண்டும்" என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x