பரம்பிக்குளம் -ஆழியாறு பாசனக் கால்வாயில் தண்ணீர் திருட்டு; ட்ரோன் மூலம் வீடியோ எடுத்து புகார் அளித்த பூலாங்கிணறு விவசாயிகள்

பிஏபி வாய்க்கால்களில் ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட தண்ணீர் திருட்டு தொடர்பாக விவசாயிகள் குறிப்பிடும் ஒரு சில தண்ணீர் திருட்டு இடங்கள்
பிஏபி வாய்க்கால்களில் ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட தண்ணீர் திருட்டு தொடர்பாக விவசாயிகள் குறிப்பிடும் ஒரு சில தண்ணீர் திருட்டு இடங்கள்
Updated on
1 min read

பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனக் கால்வாயில் தண்ணீர் திருட்டைத் தடுக்க வலியுறுத்தி, ட்ரோன் மூலம் தண்ணீர் திருட்டை அம்பலப்படுத்தும் வீடியோ எடுத்து பூலாங்கிணறு விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு 49.3 கிலோ மீட்டர் தூரம், காண்டூர் சமமட்ட கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு அணை நிரப்பப்படுகிறது. திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தில் 3.77 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு, முறை வைத்துத் தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது முதல் மண்டல தண்ணீர் திறப்பில் மூன்றாம் சுற்று நிறைவடைய உள்ள நிலையில், பல்வேறு இடங்களில் தண்ணீர் திருட்டு நடைபெறுவதாக விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

தண்ணீர் திருட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், அதிரடியாக களம் இறங்கிய பூலாங்கிணறு கிளை வாய்க்கால் கடைமடை விவசாயிகள் ட்ரோன் மூலம் கண்காணித்து தண்ணீர் திருட்டை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

பி.ஏ.பி. பிரதான கால்வாயில் இருந்து பூலாங்கிணறு கிளை வாய்க்கால் 20 கிலோ மீட்டர் தூரத்துக்குச் செல்கிறது. இதன் மூலம் முத்துசமுத்திரம், மசக்கவுண்டன்புதூர், வடுகபாளையம் பகுதிகளில் 7,800 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகிறது. இங்கு தென்னை, மக்காச்சோளம், பீட்ரூட், தக்காளி, வெண்டை ஆகியன சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு மூன்றாம் சுற்றுக்குத் திறக்கப்பட்ட தண்ணீரை, வழியோரம் உள்ள விவசாய நிலங்களில் பலர் திருட்டுத்தனமாக மோட்டார் வைத்து உறிஞ்சுவதை ட்ரோன் மூலம் வீடியோ எடுத்தனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:

"7,800 ஏக்கருக்குத் திறக்கப்பட்டத் தண்ணீரில், இதுவரை 30 சதவீத நீர் மட்டுமே கடைமடை விவசாயிகளுக்குக் கிடைத்துள்ளது. ட்ரோன் காணொளியை ஆதாரமாக வைத்து பி.ஏ.பி. செயற்பொறியாளர் மற்றும் பாசன நீர் பகிர்மான அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளோம்" என்றனர்.

இந்த தண்ணீர் திருட்டு வீடியோ, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

பி.ஏ.பி. செயற்பொறியாளர் கோபி கூறியதாவது:

"தண்ணீர் திருட்டுத் தொடர்பாக, தளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். இது தொடர்பாக போலீஸார் நடவடிக்கை மேற்கொள்வார்கள்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in