

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அரசு மருத்துவரிடம் சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்றினால் நேற்று (ஏப்.29) வரை அரசு மருத்துவர் உட்பட 50 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். 23 பேர் பூரண குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் கரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் கரோனா சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றிய எலும்பு முறிவு மருத்துவர் ஒருவருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் அவர் கரோனா சிறப்புப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவரிடம் சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறையினரிடம் கேட்டபோது, "கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மருத்துவருக்கு கடந்த டிசம்பர்மாதம் திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் தன் தந்தையுடன் கிருஷ்ணகிரியில் தங்கியுள்ளார்.
ஒருவாரம் தொடர்ச்சியாக விழுப்புரம் கரோனா சிறப்புப்பிரிவில் பணியாற்றிய மருத்துவர், தன் மனைவியை பார்ப்பதற்காக கடந்த 25-ம் தேதி கிருஷ்ணகிரி சென்றுள்ளார். பின்னர் 28-ம் தேதி விழுப்புரம் வந்துள்ளார். அவராக முன்வந்து மருத்துவமனையில் கரோனா நோய் தொற்று பரிசோதனை எடுத்துக்கொண்டார். அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, இத்தகவலை கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், அரசு மருத்துவமனையில் பணியாற்றிய குழந்தைகள் நல மருத்துவர், அவரது தந்தை மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என 11 பேரிடம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறதுg" என்றனர்.
இதற்கிடையே விழுப்புரம் மாவட்ட எல்லையில் மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிர பரிசோதனைக்குப் பின்பே அனுமதிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை நேற்று இரவு ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், எஸ்.பி.ஜெயக்குமார் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.