

திருச்சி ஸ்ரீரங்கம் வரும் பக்தர்கள் தங்குவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.43 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றுக் கரையில் கட்டப்பட்டு வரும் யாத்திரிகர் நிவாஸ் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு, திறப்பு விழாவுக்குத் தயாராகி வருகிறது.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே தீவு போன்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சிறப்பு வாய்ந்த 108 வைணவத் தலங்களில் முதன்மையானது. இங்கு ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வெளியூர்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கு போதுமான தங்கும் விடுதிகள் ஸ்ரீரங்கத்தில் இல்லை.
முதல்வர் அடிக்கல் நாட்டினார்
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 2011-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் வரும் பக்தர்களின் வசதிக்காக யாத்திரிகர் நிவாஸ் என்ற தங்கும் விடுதியைக் கட்ட முடிவு செய்து, இதற்கென ஜூன் 2011-ல் அடிக்கல் நாட்டினார்.
இந்த தங்கும் விடுதியை அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு பின்புறம், கொள்ளிடம் ஆற்றின் கரையில் கட்ட முடிவு செய்யப்பட்டு, ரூ.43 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது.
1,000 பேர் தங்குவதற்கு வசதி
இந்த தங்கும் விடுதி ஒரே நேரத்தில் 1,000 பக்தர்கள் தங்கும் அளவுக்கு வசதி கொண்டது. 18 பிரிவுகளாக கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் ஒவ்வொன்றிலும் 4 தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டிடத்தின் முகப்பிலும் புல்வெளிகள், அலங்கார மின் விளக்குகள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் குடும்பங்கள் தங்கும் வகையில் 6 குடில்கள், உணவகம், இரு படுக்கை வசதி கொண்ட 100 அறைகள், இரு சாப்பிடும் அறைகள் மற்றும் சமையலறை உள்ளிட்டவைகளும் கட்டப்பட்டுள்ளன.
மேலும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான முடி காணிக்கை அளிக்கும் அறைகள், கார் ஓட்டுநர்களுக்கான ஓய்வு அறைகள் மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் ஆகியவையும் கட்டப்பட்டுள்ளன.
95 சதவீதம் பணிகள் நிறைவு
இதன் கட்டுமானப் பணிகள் ஏறத்தாழ 95 சதவீதம் அளவுக்கு முடிக்கப்பட்டு, இறுதிக்கட்ட அழகூட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் முதல்வர் ஜெயலலிதா இந்த தங்கும் விடுதியை திறந்து வைக்க உள்ளார் என்கிறது அரசு வட்டாரங்கள்.