

கால்நடைகளுக்கு ஏற் கெனவே கோமாரி நோய் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதால், கரோனா தாக்கம் இருக்காது என கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை நெசவாளர் காலனி குடியிருப்புப் பகுதியில் கரோனா நிவாரணப் பொருட்களை வழங்கிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புள்ளான 112 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இவர்களில் 82 பேர் குணமடைந்துள்ளனர். 30 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த இரு நாட்களாக திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புள்ளவர்கள் கண்டறியப்படவில்லை.
திருப்பூர்மாவட்டத்தில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 742 வெளிமாநிலத்தவர்கள் வசித்து வருவதால், அவர்கள் அனைவருக்கும் உரிய மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு பணியில் உள்ள காவல்துறையினர், மருத்துவர்கள் உள்ளிட்ட களப்பணியாளர்களுக்கு 5 லட்சம் முட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு அதிக அளவில் முட்டை மற்றும் கோழிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை தடையின்றி செல்வதற்கு சோதனைச் சாவடிகளில் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கால்நடைகளுக்கு தட்டுப்பாடின்றி தீவனம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதால், கால்நடைகளுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படாது.இருப்பினும் மாநிலம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவமனைகள், அம்மா ஆம்புலன்ஸ்கள் மூலம் கால்நடைகளுக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.