

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் கடந்த ஒருவாரமாக பணியாற்றிய செவிலியர்களை தனியார் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தனிமைப்படுத்தி தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், நேற்றுமுன்தினம் மாலை கரோனா வார்டில் பணி முடித்த செவிலியர்களை தங்கவைப்பது தொடர்பாக எந்தத் தகவலையும் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரி தரப்பில் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
20-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் தனியார் பல்கலைக்கழகத்துக்கு சென்றபோது பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து, இரவு 9 மணியளவில் அனைவரும் மீண்டும்மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திரும்பி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அங்கிருந்த மருத்துவர்கள் சமாதானம் செய்தனர். மேலும்,மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் அவர்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று காலை கரோனா வார்டில் பணி முடித்த செவிலியர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரு குழு தனியார் பல்கலைக்கழகத்திலும் மற்றொரு குழு வேலூரில் உள்ள தனியார் விடுதி கட்டிடத்திலும் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.