Published : 30 Apr 2020 08:17 AM
Last Updated : 30 Apr 2020 08:17 AM

ஊரடங்கில் விலக்கு பெற்ற நிறுவனங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்றாவிட்டால் ‘சீல்’- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தி எதிரொலியாக, ஊரடங்கு காலத்தில் விலக்கு பெற்று செயல் படும் நிறுவனங்கள், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாவிட்டால் மூடி சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.

சென்னையில் கரோனா தொற் றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது. இதுவரைராயபுரம் மண்டலத்தில் அதிக எண்ணிக்கையில் பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது திரு.வி.க.நகர் மண்டலத்தில் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக 77-வது வார்டில்அதிக மாக உள்ளது. இம்மண்டலத்தில் பாதிப்பு 128 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தொற்றின் உச்சகட்டமாக 28-ம் தேதி ஒரேநாளில் 103 பேருக்கு சென்னையில்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாநகராட்சி சுகாதாரத் துறை இணை ஆணையர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதற்கிடையே, ‘சீல் வைக்கப்பட்ட 202 பகுதிகளில் என்ன நடக்கிறது?’ என்ற தலைப்பில் ‘இந்து தமிழ்திசை’ நாளிதழில் 29-ம் தேதிசெய்தி வெளியானது. அதில் ‘விலக்கு பெற்று செயல்படும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை கண்காணிக்காமல் விட்டதால்தான் சென்னையில் கரோனா தொற்றுஅதிகமானது’ என குறிப்பிடப்பட்டி ருந்தது. ‘இந்து தமிழ் திசை’ செய்திஎதிரொலியாக விலக்கு பெற்று செயல்பட்டுவரும் நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சி பகுதியில் அத்தியாவசிய தேவைகளுக்காக இயங்கும் மத்திய, மாநில அரசுநிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வங்கிகளில் தினமும் 2 முறைகிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். ஏடிஎம்களில் ஒருவர்பயன்படுத்திய பின்னர் கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.பணியாளர்கள், அலுவலர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். அலுவலகத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தங்கள் அலுவலகம், கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரங்கள், பணியாளர்கள் குறித்த விவரத்தை arohqprop@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும்94451 90742 என்ற வாட்ஸ்அப்எண்ணுக்கும் மே 1-க்குள் அனுப்ப வேண்டும்.

அனைத்து அலுவலகங்களும் அவ்வப்போது சுகாதாரத் துறை அலுவலர்களால் ஆய்வு செய்யப் படும். அறிவுறுத்தல்களை கடைபிடிக்காத அலுவலகங்கள் பூட்டிசீல் வைக்கப்படும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x