Published : 29 Apr 2020 09:21 PM
Last Updated : 29 Apr 2020 09:21 PM

விவசாயிகளின் விளைபொருட்களைத் தடை செய்யக்கூடாது: மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைவாகத் திரும்பும் வகையில், மாவட்டங்களில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு பகுதிகளில் உரிய நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, அப்பகுதிகளை, பச்சைப் பகுதிகளாக மாற்றிட போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தினார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“இன்று (29.4.2020) அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியின் ஆணையருடன் காணொலிக் காட்சி மூலமாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனோ வைரஸ் நோய்த் தொற்றின் தற்போதைய நிலவரமும், அதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்பணிகளைத் தீவிரப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன:

ஒவ்வொரு மாவட்டத்திலும் நோய்ப் பரவலின் தற்போதைய நிலைக்கு ஏற்ப எந்தெந்தத் தொழில்களையும், பணிகளையும் படிப்படியாகத் தொடங்கலாம் என்பது பற்றி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் விரிவான அறிக்கையை அரசுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.

* அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், சென்னை மாநகராட்சி ஆணையரும், ஊரக மற்றும் நகர பகுதிகளில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை, மாநில வாரியாகக் கணக்கெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், அவர்கள் தங்கியுள்ள இடங்களில் அரசு அறிவித்த நிவாரணப் பொருட்கள் அவர்களிடம் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும்.

அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். விடுபட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் எவரேனும் இருந்தால், அவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கும் நிவாரணப் பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும்.

*வேளாண் பணிகள் பாதிக்காத வண்ணம், விவசாயிகளுக்குத் தேவையான உபகரணங்கள், இடுபொருட்கள் ஆகியவை எந்தவித தங்கு தடையுமின்றி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், விவசாயிகளின் விளைபொருட்களைச் சந்தைகளுக்குக் கொண்டு செல்ல எந்தத் தடையும் இருக்கக் கூடாது.

* மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைவாகத் திரும்பும் வகையில், மாவட்டங்களில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு பகுதிகளில் உரிய நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, அப்பகுதிகளை, பச்சைப் பகுதிகளாக மாற்றிட போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

தேசிய மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம் எந்த தங்கு தடையுமின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். அப்போது, சமூக விலகலைக் கண்டிப்பாக கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிவதை உறுதி செய்தும், மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களைக் கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

*கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் (Containment Zon) தினந்தோறும் 2 முறை கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும். மேலும் பொதுக் கழிவறைகள் தினந்தோறும் 3 முறை சுத்தப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும்.

* இப்பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் வெளியே வராத வகையில், அப்பொருட்களை அவர்களுடைய வசிப்பிடத்திலேயே வழங்க சிறப்பு ஏற்பாடுகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

* தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் தினமும் சுமார் 7 லட்சம் ஏழை, எளிய மக்களுக்குத் தரமான உணவு 3 வேளையும் வழங்கப்பட்டு வருகிறது. அதைப் போல சமுதாய சமையல் கூடங்களும் அமைக்கப்பட்டு, தினந்தோறும் 1.50 லட்சம் முதல் 2 லட்சம் முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்குத் தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இவ்விடங்களில் தொடர்ந்து சுவையான, தரமான, சுகாதாரமான உணவு வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் கள ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.

* தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக்கடைகளில் மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கான டோக்கன்கள் வழங்கும்போது அவற்றில் நேரம், நாள் ஆகியவற்றை அச்சடித்து வழங்க வேண்டும். டோக்கன்களை வழங்கும்போது, எந்த நாள் மற்றும் நேரத்தில் நியாய விலைக் கடைகளுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறிவிட்டு வர வேண்டும்.

* காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் மற்றும் நியாய விலைக்கடைகளில் தகுந்த சமூக இடைவெளியைக் கண்டிப்பாக கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். மக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

* காவல்துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தினமும், ஒலிபெருக்கி மூலமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், முகக்கவசம் அணிந்து வரும்படியும், சுற்றுப்புறத்தை சுகாதாரமாக பேணவும் அறிவிப்பு செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x