

சென்னையில் நாளொன்றுக்கு 2,000 கரோனா தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய ரூ.6.50 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் 100 கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரங்களை அந்தந்த மண்டலங்களுக்கு ஆணையர் பிரகாஷ் இன்று (ஏப்.29) ரிப்பன் மாளிகை வளாகத்தில் வழங்கினார்.
பின்னர் ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
"சென்னை மாநகராட்சியில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று அதிகமாக உள்ள 6 மண்டலங்களில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கண்காணிப்புப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தண்டையார்பேட்டை, ராயபுரம் மற்றும் திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் கிருமிநாசினி தெளித்தல், வீடுகள்தோறும் சென்று நோய்த்தொற்று கண்டறிதல், பரிசோதனைகளை அதிகப்படுத்துதல் போன்ற பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதிகளில் உள்ள மக்களுக்குத் தேவையான காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் அந்தந்தப் பகுதிகளிலேயே மாநகராட்சிப் பணியாளர்கள் மற்றும் தன்னார்லர்களைக் கொண்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கடைகளில் தனிமனித இடைவெளி சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா எனக் கண்காணிக்கப்பட்டு தவறும்பட்சத்தில் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும். தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரிசோதனைகள் அதிக அளவில் செய்யப்படுகின்றன. இதுவரை 22 ஆயிரத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 2,000 கரோனா தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
சென்னை மாநகராட்சியின் சார்பில் மாநகராட்சி ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்குக் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன"
இவ்வாறு ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.