

தமிழகத்தில் 104 பேருக்கு இன்று தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 2,162 ஆக அதிகரித்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் 90 சதவீதத்துக்கும் மேல் அதாவது 94 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 674 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 768 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தொடர்ச்சியாக மருத்துவ சோதனையில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஊரடங்கு காலத்தில் வீட்டில் தனிமையில் இருப்பது குறித்து அரசு வலியுறுத்தி வந்தபோதும் பலரும் அதைக் கடைப்பிடிப்பதில்லை. இதனால் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது.
சென்னையில் என்ன முயன்றும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என முதல்வர் பழனிசாமி இன்று தெரிவித்துள்ளார். இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் களப்பணிக்குழு அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளார்.
இதுதவிர சென்னையில் மட்டும் 6 மண்டலங்களுக்கு தனி களப்பணி குழுக்களும், மீதமுள்ள மண்டலங்களில் 3 மண்டலங்களுக்கு ஒரு களப்பணிக்குழுவும் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கரோனா உறுதிப்படுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. இன்று கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 104 ஆகும். அதைச் சேர்த்து 2,162 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 94 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மீதியுள்ள 4 மாவட்டங்களில் 10 பேருக்கு தொற்று உள்ளது. நல்வாய்ப்பாக 32 மாவட்டங்களில் தொடர்ந்து தொற்று இல்லாமல் உள்ளது.
தமிழகத்தில் ரேபிட் டெஸ்ட் பலனளிக்காத நிலையில் பிசிஆர் சோதனை நடத்தப்படுகிறது. சாதாரணமாக தினமும் 200 பிசிஆர் சோதனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது 7,100 சோதனைகள் தினம் நடத்தும் அளவுக்கு தமிழகம் முன்னேறியுள்ளது. தற்போது 33 அரசு ஆய்வகங்கள், 11 தனியார் ஆய்வகங்கள் என 44 ஆய்வகங்கள் உள்ளன.
இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:
* தமிழகத்தில் நேற்று வரை தனிமைப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்து 362 பேர்.
* 28 நாட்கள் தனிமைப்படுத்துதலைப் பூர்த்தி செய்தவர்கள் 87 ஆயிரத்து 159 பேர்.
* தற்போது தனிமையில் இருப்பவர்கள் 30 ஆயிரத்து 580 பேர்.
* அரசின் கண்காணிப்பில் இருப்பவர்கள் 48 பேர்.
* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,09,961 .
* மாதிரி எடுக்கப்பட்ட தனி நபர்கள் எண்ணிக்கை 1,01,075.
* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 8,087.
* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 104.
* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 63 பேர். பெண்கள் 41 பேர்.
* மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,162.
* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 82 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,210 பேர்.
* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் சென்னையில் 65 வயது ஆண், 27 வயதுப் பெண் என இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றால் முதன்முறையாக குறைந்த வயதுடைய ஒருவர் மரணம். இதனால் உயிரிழப்பு 27 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 94 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் 674 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 768 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பெரு நகரங்களில் சென்னை 1,000 என்ற எண்ணிக்கையை நோக்கி வேகமாகச் செல்கிறது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை 141, திருப்பூர் 112, திண்டுக்கல் 80, ஈரோடு 70 என்கிற அதே எண்ணிக்கையுடன் கரோனா பாதிப்பு எண்ணிக்கை உள்ளது. புதிதாக சென்னையில் 94, திருவள்ளூரில் 1, விழுப்புரத்தில் 2, காஞ்சிபுரத்தில் 3, செங்கல்பட்டில் 4 என மொத்தம் 5 மாவட்டங்களில் மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில் தொற்று இல்லை.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 129 பேர். இதில் ஆண் குழந்தைகள் 71 பேர். பெண் குழந்தைகள் 58 பேர்.
13 முதல் 60 வயது உள்ளவர்கள் 1,788 பேர். இதில் ஆண்கள் 1,214 பேர். பெண்கள் 574 பேர்.
60 வயதுக்கு மேற்பட்டோர் 245 பேர். இதில் ஆண்கள் 171 பேர். பெண்கள் 74 பேர்.
15க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உள்ள, நான்கு நாட்களில் எண்ணிக்கை இரட்டிப்பாகும், சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 25.
15 நபர்களுக்குக் கீழ் தொற்று எண்ணிக்கை கொண்ட ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 11.
கடந்த 28 நாட்களாக ஒரு தொற்றும் இல்லாத பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்ட மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே.
இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.