

கன்னியாகுமரி மாவட்டம் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள், பெற்றோர் உட்பட மேலும் 5 பேர் வீடு திரும்பினர். தற்போது 6 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 16 பேர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களில் ஏற்கெனவே 7 பேர் குணமடைந்த நிலையில் 5 பேர் மட்டும் வீடு திரும்பியிருந்தனர். குணமடைந்திருந்த நாகர்கோவில் வெள்ளடிச்சிவிளையை சேர்ந்தவரும், அவரது 5 வயது மகனும் கரோனா வார்டில் தங்களது குடும்பத்தினர் சிகிச்சை பெற்று வருவதால் வீட்டிற்கு செல்லாமல் மருத்துவமனையிலேயே இருந்தனர்.
இந்நிலையில் 2-வது கட்ட பறிசோதனையில் குணமடைந்து மருத்துவமனையில் இருந்தவரின் மனைவி, 7 வயது மகன் உட்பட 3 பேர் குணமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து 5 பேரும் வீடு திரும்பினர். அவர்களை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் வழியனுப்பி வைத்தனர்.
அவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இரு வாரங்கள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
தற்போது குணமடைந்து வீடு திரும்பியவர்கள் உட்பட குமரி கரோனா வார்டில் இருந்து இதுவரை 10 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 6 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா பாதித்து குழந்தைகளுடன் வீடு திரும்பிய பெற்றோர் கூறுகையில்; இரு குழந்தைகள், தாய், வயதான பாட்டி என குடும்பத்தினருக்கே கரோனா பாதித்ததால் பெரும் அச்சத்துடன் சிகிச்சை பெற்று வந்தோம். தற்போது மருத்துவர்களின் சிறந்த சிகிச்சையால் பெரும் உயிர் போராட்டத்தில் இருந்து மீண்டுள்ளோம் என்றனர்.