

இளைஞர் ஒருவர் ஐதராபாத்திலிருந்து திருக்கோவிலூருக்கு சுமார் 700 கி.மீ., இளைஞர் ஒருவர் நடந்தே வந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அருகே கொள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (26). இவர் ஆன்லைன் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இந்தியா முழுவதும் மார்ச் 24-ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அங்கேயே முடங்கிக் கிடந்தார். பின்னர் கடந்த 14-ம் தேதி நடந்தே சொந்த ஊருக்கு செல்லலாம் என முடிவெடுத்தார்.
இத்தகவலை முன்னாள் அமைச்சரான பொன்முடியிடம் மொபைலில் தெரிவித்துள்ளார். வழியில் ஏதேனும் பிரச்சினை என்றால் தெரிவிக்குமாறு அமைச்சர் பொன்முடி அந்த இளைஞரிடம் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, ஐதராபாத்திலிருந்து கர்நூல், கடப்பா, சித்தூர், வேலூர் வழியாக சுமார் 700 கி.மீ. நடந்தே நேற்று (ஏப்.28) இரவு திருவண்ணாமலை வந்தடைந்தார். அங்குள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று கரோனா பரிசோதனை எடுத்துக்கொண்டு இன்று காலை மீண்டும் திருக்கோவிலூர் நோக்கி நடந்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட எல்லையான வெறையூரை நெருங்கும்போது உறவினர் மணிகண்டனை தொடர்புகொண்டு விவரத்தைக் கூறியுள்ளார். இதையறிந்த மணிகண்டன் தன் இருசக்கர வாகனத்தில் சதீஷை அழைத்து வர வெறையூர் சென்றார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் இருவரையும் கைது செய்து இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.
இத்தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி பத்திரிகையாளர்கள் மூலம் திருவண்ணாமலை எஸ்.பி.யிடம் விவரத்தைத் தெரிவிக்கச் சொல்லியுள்ளார். பின்னர், எஸ்.பி.யின் உத்தரவின் பேரில் சதீஷ் மற்றும் மணிகண்டனை விடுவித்து இருசக்கர வாகனத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
பின்னர் மீண்டும் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இன்று மதியம் அவர் சொந்த ஊருக்கு வந்தடைந்தார். அவர் நடந்து வந்த தூரம் சுமார் 700 கிலோ மீட்டராகும்.
இது தொடர்பாக சதீஷிடம் பேச முயன்றும் தொடர்பு கொள்ள முடியவில்லை.