

கும்பகோணத்தில் கூலித் தொழிலாளி ஒருவர், விபத்தில் சிக்கி, இடுப்புக்குக் கீழே உறுப்புகள் செயலிழந்ததால் முடங்கிய நிலையில், கரோனாவால் அவரின் குடும்பம் புதிய விடிவு காலம் பெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பாபுராஜபுரம் புளியஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (38). கூலித் தொழிலாளியான இவர், விபத்து ஒன்றில் சிக்கி இவருடையை இடுப்புக்குக் கீழே உறுப்புகள் செயலிழந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுக்குள்ளேயே படுத்த படுக்கையாக உள்ளார்.
இந்நிலையில், இவரின் மனைவி சாந்தி (32), கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். இவர்களுக்கு விஜய் (13) என்ற மகன் உள்ளார்.
தற்போது ஊரடங்கு உத்தரவால், வேலைக்குச் செல்ல முடியாமல் சாந்தி குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டு அன்றாடம் உணவுக்கே கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இதற்கிடையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட 'ஒன்றிணைவோம் வா' என்ற எண்ணுக்குத் தொடர்புகொண்டு, சாந்தி தன்னுடைய குடும்பச் சூழ்நிலையை விளக்கி, உதவிகள் கேட்டுள்ளார். இந்த விவரங்கள் உடனடியாக கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகனுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 27-ம் தேதி, சக்திவேல் வீட்டுக்குச் சென்று ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும், கைச்செலவுக்கு 2 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் எம்எல்ஏ வழங்கினார்.
அப்போது, சாந்தி, "கடன் கொஞ்சம் இருக்கிறது. அதைத் தீர்க்க கறவை மாடு வாங்கிக்கொடுத்தால், அதில் வரும் வருமானத்தைக் கொண்டு கடனைத் தீர்த்துக்கொள்வோம்" என எம்எல்ஏவிடம் கேட்டுள்ளார். "கரோனா ஊரடங்கு நீங்கிய பிறகு நிச்சயம் கறவை மாடு வாங்கித் தருகிறேன். உங்களுடைய மகனின் படிப்புச் செலவையும் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்" என எம்எல்ஏ உறுதியளித்துள்ளார்.
இதையடுத்து சாந்தி எம்எல்வுக்கு நன்றி கூறியதுடன், "இத்தனை ஆண்டு காலம் எனது குடும்பம் பல இன்னல்களைச் சந்தித்தது. இந்த கரோனாவால் எனது குடும்பத்தின் நிலை வெளியே தெரிந்து உதவ முன்வந்துள்ளமைக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன்" என கையெடுத்துக் கும்பிட்டுள்ளார்.
இதுகுறித்து எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் கூறுகையில், "ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 24-ம் தேதி முதல் தற்போது வரை தினமும் 300 ஆதரவற்றோருக்கு கும்பகோணம் பகுதியில் உணவு வழங்கி வருகிறேன். அதேபோல் வாழ்வாதரத்தை இழந்த 1,500 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா ரூ.1,000 உதவித்தொகையை வழங்கியுள்ளேன்.
இது மட்டுமல்லாமல் எனது தொகுதியில் உள்ள 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான நலிந்த குடும்பத்தினருக்குத் தலா ரூ.800 மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை தினமும் வழங்கி வருகிறேன். இதையெல்லாம் நான் கணக்குப் பார்ப்பது கிடையாது. ஏதோ என்னால் முடிந்த வரை உதவி செய்கிறேன். அதேபோல் சக்திவேல் குடும்பத்துக்கும் உதவி செய்துள்ளேன். இனியும் செய்வேன்" என்றார்.