

லாக் டவுனில் வீட்டிலேயே முடங்கியுள்ள சிரமமின்றி மக்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் முகக் கவசங்களைத் தங்கள் வீட்டிலிருந்தே பெற இந்திய அஞ்சல்துறை "போஸ்ட் இன்ஃபோ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
லாக் டவுன் காலத்திலும் தொடர்ந்து பணியாற்றிவரும் இந்திய அஞ்சல் துறை தனது வழக்கமான சேவையோடு மிகவும் தேவையான மருந்துகள் முகக் கவசங்களை வீடு தேடி வந்து வழங்க புதிய ஆண்ட்ராய்டு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஆண்ட்ராய்டு மொபைல் பயன்பாடு 'போஸ்ட் இன்ஃபோ'. இதனைப் பதிவிறக்கம் செய்த பின்பு தேவையான கோரிக்கையை வெற்றிகரமாக சமர்ப்பித்த பின்னர், கோரிக்கையின் நிலையை அறிய பயனருக்கு ஒரு தனித்துவமான குறிப்பு எண் உருவாக்கப்படும். அதன் பின்னர் மருந்துகள் மற்றும் முகக்கவசங்கள் மக்களின் வீட்டு வாசலிலேயே வழங்கப்படும். ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான இச்செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் இதுகுறித்துக் கூறுகையில், "லாக் டவுன் காரணமாக எங்கள் சேவைகளில் எந்தவிதமான வீழ்ச்சியும் ஏற்படவில்லை. எங்கள் ஊழியர்கள் இந்த மனஅழுத்த சூழ்நிலைகளிலும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். வழக்கமான சேவைகளைத் தவிர, மக்களின் வேண்டுகோளின் அடிப்படையில் அவர்களுக்கு மருந்துகள் மற்றும் முகக்கவசங்களையும் வழங்கி வருகிறோம். வாடிக்கையாளர்கள் தபால் சேவைகள், அஞ்சல் வங்கி, சேமிப்பு வங்கி, காப்பீடு, நிதி சேவைகள் என அனைத்து தபால் சேவைகளையும் தடையின்றிப் பெறலாம்.
அதுமட்டுமின்றி மக்களுக்குத் தேவையான முகக் கவசம், மருந்து ஆகியவற்றைப் பெற ஆண்ட்ராய்டு செயலியும் இந்திய அஞ்சல்துறை அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலியின் வழியே ஆர்டர் செய்தும் தங்களுக்குத் தேவையான மருந்துகளையும் முகக்கவசகங்களையும் பயனர்கள் சிரமமின்றிப் பெறலாம்'' என்றார்.