ராஜஸ்தான் நீட் பயிற்சி மையத்தில் சிக்கித் தவிக்கும் 79 தமிழக மாணவர்களை மீட்க வேண்டும்: பாஜக தலைவர் முருகன் கோரிக்கை

ராஜஸ்தான் நீட் பயிற்சி மையத்தில் சிக்கித் தவிக்கும் 79 தமிழக மாணவர்களை மீட்க வேண்டும்: பாஜக தலைவர் முருகன் கோரிக்கை
Updated on
2 min read

கரோனா பேரிடர் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலான நிலையில், ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சிக்காகச் சென்ற 79 தமிழக மாணவர்கள் சிக்கியுள்ளனர். அவர்களைத் தமிழகம் மீட்டு வர பாஜக தலைவர் முருகன் முதல்வர் பழனிசாமிக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ளது. இந்த மையம் பிரபலமானது என்பதால் இந்தியாவில் பல மாநிலங்களிலிருந்து மாணவர்கள் அங்கு தங்கியிருந்து பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் கரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலான நிலையில் பயிற்சி மையம் மூடப்பட்டது. இங்கு சிக்கிக்கொண்ட உத்தரப் பிரதேசம், பிஹார், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநில மாணவர்களை அந்தந்த மாநிலங்கள் மீட்டு அழைத்துச் சென்றுவிட்டன.

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அங்கு பயிற்சிக்காக சென்ற 79 மாணவர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் கோரிக்கை தமிழக அரசைச் சென்றடையாததால் அவர்கள் இதுவரை மீட்கப்படவில்லை.

இந்நிலையில் இதுகுறித்துத் தகவலறிந்த பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் உடனடியாக அங்குள்ள அதிகாரிகளைத் தொடர்புகொண்டு வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கக் கேட்டுக்கொண்டார். அவர்களைப் பத்திரமாக தமிழகம் அழைத்துவர தமிழக முதல்வருக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமிக்கு ட்விட்டரில் அவர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சிக்குச் சென்ற மாணவர்கள் ஊரடங்கால் சிக்கிய நிலையில் மற்ற மாநிலங்கள் அவரவர் மாணவர்களை அழைத்துச் செல்ல தமிழகத்தைச் சேர்ந்த 79 மாணவ-மாணவியர் சிக்கிக்கொண்டனர்.

அவர்களை மீட்டு தமிழகம் அழைத்து வரவேண்டும் என அவர்களை மீட்க நான் ராஜஸ்தானை சேர்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் மாணவர்களைத் தமிழகம் அனுப்ப சம்மதம் தெரிவித்துள்ளார். @CMOTamilNadu தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

இவ்வாறு முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் எல்.முருகனிடம் 'இந்து தமிழ் திசை' சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:

''நீட் பயிற்சிக்காகச் சென்ற தமிழக மாணவர்கள் ராஜஸ்தானில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. எந்தப் பிரச்சினையும் இல்லை. 2 தமிழ் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், அவர்களை ஊருக்கு அழைத்துவர வேண்டும் என்று பெற்றோர்கள் கேட்டுள்ளனர். பதற்றத்தில் உள்ள மாணவர்களும் ஊருக்கு வர விரும்புகிறார்கள். அதுகுறித்து அங்குள்ள அலுவலர்களிடம் பேசி இருக்கிறேன். முதல்வருக்கும் ட்வீட் செய்துள்ளேன். இங்குள்ள அதற்கான பொறுப்பு அதிகாரியிடம் விரைவில் பேசி அழைத்து வர ஏற்பாடு செய்ய இருக்கிறேன்”.

இவ்வாறு முருகன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in