

கரோனா தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தால் தமிழகத்தில் சலூன் கடைகள் திறக்கப்படவில்லை. அதேநேரம் நீண்ட நாள்களாக முடிதிருத்தம் செய்யாததால் குழந்தைகள் மத்தியிலும் சளிப் பிரச்சினை தலைதூக்கி இருக்கிறது. இப்படியான சூழலில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சிலர், குழந்தைகளின் நலன் கருதி அவர்களது வீடுகளுக்கே சென்று முடிதிருத்தம் செய்கிறார்கள்.
அப்படி குமரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு முடிதிருத்தம் செய்துவரும் பரமசிவம் இதுகுறித்துக் கூறுகையில், “எனக்கு அம்பாசமுத்திரம் பூர்விகம். பொதுமுடக்கத்தால் கடையைத் திறக்க முடியாத நிலையில் வீட்டிலேயேதான் முடங்கி இருந்தேன்.
இப்படியான சூழலில்தான் சிறுகுழந்தைகளுக்கு அடர்த்தியாக முடி வளர்ந்து சளிப் பிரச்சினை ஏற்பட்டதா பலரும் என்னை அழைத்தார்கள். அரசின் உத்தரவை மதித்து கடையே திறக்காதபோது, இது மட்டும் சாத்தியமான்னு முதலில் தோணுச்சு. ஆனாலும் சின்னப் பிள்ளைங்களோட கஷ்டத்தை மனசில் வைச்சுட்டு வீட்டுக்கே போய் முடிதிருத்தம் செய்ய ஆரம்பிச்சேன்.
வீட்டுக்கே போய் முடிதிருத்தம் செய்யுறதால கூடுதல் கட்டணம் வாங்குறது இல்ல. பொதுமுடக்கம் அமலில் இருக்கும் நேரத்தில் அன்றாட வாழ்க்கையை ஓட்டுறது எவ்வளவு கஷ்டம்னு அனுபவபூர்வமா நானே உணர்ந்திருக்கேன். அதனாலேயே கொடுக்குற காசை வாங்கிப்பேன். அரசு ஊரடங்கில் சவரத் தொழிலாளர்களின் நிலையையும் கவனத்தில் எடுத்து எங்களுக்கும் உரிய நிவாரணம் கொடுக்கணும்” என்றார்.