

கோவை அரசு சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சட்டக் கல்லூரி முதல்வர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இன்று (ஏப்.29) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதையொட்டி அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், தமிழ்நாடு சட்டக் கல்வி இயக்குநர் என்.எஸ்.சந்தோஷ்குமார் அறிவுத்தலின்படி, கோவை அரசு சட்டக் கல்லூரியில் இணையவழி கற்றல் வகுப்புகள் தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றன.
இக்கல்லூரியில் நடத்தப்பட்டு வரும் 5 ஆண்டு சட்டப் படிப்பு, 3 ஆண்டு சட்டப் படிப்பு மற்றும் முதுநிலை சட்டப் படிப்புகளில் 1,400 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கு அனைத்து வகுப்புகளிலும் தனித்தனியாக வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பாடம் மற்றும் பாடவேளை குறித்த விவரங்கள் மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது.
முதல்வரின் நேரடிக் கண்காணிப்பு இணையதளம் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், தேர்வுக்காகவும் மாணவர்கள் இணைய வழியில் தயார்படுத்தப்பட்டு வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.