Last Updated : 29 Apr, 2020 12:48 PM

 

Published : 29 Apr 2020 12:48 PM
Last Updated : 29 Apr 2020 12:48 PM

அவசர சிகிச்சைக்கு ரத்தம் கொடுக்க நள்ளிரவில் ஓடிவந்த இளைஞர்: உயிர் பிழைத்த பெண்

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் பல இக்கட்டுகளை ஏற்படுத்தி இருந்தாலும் இரக்கமுள்ள மனிதர்கள் பலரையும் தொடர்ந்து உலகுக்கு அடையாளம் காட்டி வருகிறது. அப்படித்தான் ரஞ்சித்குமார் என்ற இளைஞரும் வெளிப்பட்டிருக்கிறார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ரத்தம் தேவைப்பட்ட ஒரு தாய்க்கு சுமார் ஐம்பது கிலோ மீட்டர் தூரம் பயணித்துச் சென்று குருதிக் கொடை அளித்துவிட்டு மீண்டும் இரவோடு இரவாக கடலூர் திரும்பியிருக்கிறார் ரஞ்சித்குமார்.

கடலூரில் இயங்கி வரும் தன்னார்வ அமைப்பான ‘கடலூர் சிறகுகள்’ குழுவினருக்கு நேற்று (செவ்வாய்க் கிழமை) இரவு எட்டுமணி வாக்கில் வந்த ஒரு தொலைபேசி அழைப்பு உடனடியாக ஓ நெகட்டிவ் ரத்தம் தேவை எனக் கோரியது. சிதம்பரத்திலுள்ள ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெறும் கர்ப்பிணி ஒருவருக்கு வயற்றிலே சிசு உயிர்நீத்துவிட, தாயைக் காப்பாற்ற உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், அதற்காக அரியவகையான ஓ நெகட்டிவ் ரத்தம் அவசரத் தேவை எனவும் பதற்றத்துடன் கேட்கப்பட்டது.

தாயின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், எவ்வளவு விரைவில் ரத்தம் கிடைக்குமோ அவ்வளவு சீக்கிரமாக அறுவைசிகிச்சை செய்யப்படும் எனவும் தகவல் சொல்லப்பட, அந்த நேரத்தில் அந்த வகை ரத்தத்தை யாரிடம் கேட்பது எனக் குழம்பிப் போய் நின்றது கடலூர் சிறகுகள் குழு.

அப்போதுதான், இதே வகை ரத்தம் பற்றி தான் இட்டிருந்த ஒரு பதிவில் நண்பர் ஒருவர் தாமும் அந்த வகையைச் சேர்ந்தவர் எனப் பதிவிட்டிருந்தது கடலூர் சிறகுகள் அமைப்பின் தலைவர் சண்முகராஜாவுக்கு ஞாபகம் வந்தது. கடலூரில் வசிக்கும் ரஞ்சித்குமார் என்ற அந்த 23 வயது இளைஞரை உடனடியாக அவர் தொடர்பு கொண்டு அவசரத் தேவையை விளக்கினார்.

உடனே மறுப்பேதும் சொல்லாமல் ரத்தம் கொடுக்கச் சம்மதித்தார் ரஞ்சித்குமார். கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள ரஞ்சித்குமார் வீட்டிற்கு நேரில் சென்று தனது காரிலேயே அவரை அழைத்து கொண்டு சிதம்பரம் நோக்கி விரைந்தார் சண்முகராஜா. 45 நிமிடத்தில் ராஜாமுத்தையா மருத்துவமனை சென்றடைந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த அந்தப் பெண்ணின் உறவினர்கள் வாசலிலே எதிர்பார்த்து நின்றனர்.

ரஞ்சித்குமார் வந்ததும் அவரை ரத்த வங்கிக்கு அழைத்துச் சென்றனர். பொதுவாக, இரவு நேரத்தில் ரத்தம் எடுக்கமாட்டார்கள். ஆனால் உயிர்காக்கும் அவரச அறுவை சிகிச்சை என்பதால் விதிகளைத் தளர்த்திக் கொண்டனர். ரஞ்சித்குமாரிடமிருந்து ரத்தம் எடுக்கப்பட்டு உடனடியாக அந்தப் பெண்ணுக்கு ஏற்றப்பட்டு அவரைக் காப்பாற்றி இருக்கிறார்கள் மருத்துவர்கள். இதையடுத்து, அந்த சாதாரண ஏழைக் குடும்பத்தினர் ரஞ்சித்குமாருக்கு நெகிழ்வோடு நன்றி சொன்னார்கள். அதன் பிறகு இரவு 11 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 12 மணிக்கு வீடு வந்து சேர்ந்திருக்கிறார் ரஞ்சித்குமார்.

இக்கட்டான சூழலில் குருதிக் கொடையளிக்க ஓடிவந்த ரஞ்சித்குமார் இதற்கு முன்பும் ஏழுமுறை இப்படி இக்கட்டான நிலையில் ரத்த தானம் அளித்திருக்கிறார். நேற்று இரவு இவரது குருதிக் கொடையால் மறுபிறப்பெடுத்த அந்தப் பெண் இப்போது நலமுடன் இருக்கிறார்.

மனிதம் மலரட்டும!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x