

விழுப்புரம் நகரில் மக்கள் ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்கும் விதமாக, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
விழுப்புரம் நகரில் மாவட்ட நிர்வாகம் செயலிழந்து போனதால் மொத்த கரோனா தொற்றில் 75 சதவீதம் விழுப்புரம் நகர மக்களுக்கே ஏற்பட்டுள்ளது. சாலைகளில் தேவையின்றி சுற்றுவோர் மீது நடவடிக்கை இல்லை என நேற்று (ஏப்.28) காலை 'இந்து தமிழ்' செய்தி வெளியிட்டது.
இதனை தொடர்ந்து நேற்று முற்பகல் முதல் அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் பொதுமக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டது.
குறிப்பாக, கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள் விழுப்புரத்திற்கு வர தடை விதிக்கப்பட்டது. நகரை சுற்றிலும் ஏற்கெனவே தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்த பகுதிகளில் போலீஸார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் கிராமப்புற மக்களை நகருக்குள் அனுமதிக்க மறுத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.
மேலும், மாவட்டத்தில் 280 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 280 பேர் கைது செய்யப்பட்டனர். 222 இருசக்கர வாகனங்கள், 1 ஆட்டோ, 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விழுப்புரம் ரயில்வே மேம்பாலம், முத்தாம்பாளையம், மாம்பழப்பட்டு சாலை ரயில்வே கேட், ஜானகிபுரம் புறவழிச்சாலை ஆகிய இடங்களில் போலீஸார் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு அவர்கள் கிராமப்புற மக்களைத் தடுத்து நிறுத்தியதோடு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் உங்கள் பகுதிக்கே தேடி வரும் என்று கூறி அவர்களை விழுப்புரம் நகருக்குள் நுழைய விடாமல் தடுத்துத் திருப்பி அனுப்பினர்.
இதனால் நகரில் கடந்த சில நாட்களாக திருவிழா கூட்டம் போன்று காணப்பட்ட எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதிகள், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், நேருஜி சாலைகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. இந்த நடவடிக்கைகளால் தற்போதுதான் விழுப்புரம் நகரில் ஊரடங்கு என்பது மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.