

‘இந்து தமிழ்' நாளிதழ் வெளி யான முதல் நாளிலிருந்து வாசிக்கத் தொடங்கிய வாசகர்களைப் பற்றி, நமது முகவர்கள் நினைவுகூரும் பகுதி இது. இன்று மதுரை ஆரப்பாளையம் பகுதி முகவர் எம்.கண்ணன் பேசுகிறார்...
மதுரையில் எத்தனையோ வாச கர்களைப் பார்த்திருக்கேன். ரொம்ப தன்மையான, தரமான மனிதர் ஆர்.ஏ.கே.பாஷா சார். ஸ்டேட் பேங்க் மண்டல அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். அந்தகெத்து அவரிடம் கொஞ்சம்கூட இருக்காது. பத்திரிகை போடுகிற பையன்களிடமும் அன்பொழுக பேசுவார். அவர்களுக்குச் சின்னச் சின்ன உதவிசெய்வார். அவர்களது எதிர்காலத் திட்டம் பற்றி கேட்டு, ஆலோசனை சொல்வார்.
‘இந்து’ ஆங்கிலம், ‘இந்து தமிழ்’, ‘பிசினஸ் லைன்’ என்று நம்முடைய குழும இதழ்களை மட்டுமே வாங்குகிற வாசகர். “அதெப்படி சார் சொல்லி வெச்ச மாதிரி இந்து பத்திரிகை களை மட்டுமே வாங்குறீங்க?” என்று கேட்டால், “142 வருஷ பத்திரிகை. அபத்தமான, வன்முறையைத் தூண்டுகிற, ஒரு தரப்பினர் மீதான வெறுப் பைப் பரப்புகிற செய்திகளை ஒரு போதும் பிரசுரிக்க மாட்டார்கள். சின்ன வயதில் இருந்துஆங்கில இந்து வாங்கினேன். தமிழ் வந்ததும் இன்னும் சந்தோஷமாக அதையும் வாங்கினேன்.
இந்து தமிழில் வருகிற வணிகபக்கமும், வணிக வீதி இணைப்பிதழும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். பொருளாதாரத் துறையில் இருக்கிற நாம் அந்தத்துறையில் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டுமில்லையா?” என்று தன்னடக்கத்தோடு சொல்வார்.
ஊரடங்கு காரணமாக அவரால் ஆண்டுச் சந்தாவை புதுப்பிக்க முடியவில்லை. இருந்தாலும் நாங்களே அந்தத் தேதியை நினைவு வைத்து, “சார் கொஞ்ச நாள் மட்டும் மாதச்சந்தா வாங்குங்கள். அடுத்தமாதம் நாங்களே புதுப்பித்து விடுகிறோம்” என்று சொன்னோம். அவ்வளவு முக்கிய மான வாசகர் அவர்.