Published : 29 Apr 2020 07:48 AM
Last Updated : 29 Apr 2020 07:48 AM

சென்னையில் அதிகரிக்கும் கரோனா தொற்று; சீல் வைக்கப்பட்ட 202 பகுதிகளில் என்ன நடக்கிறது?- அரசு அறிவுறுத்தல்களை அலட்சியப்படுத்தினால் 28 நாள் முடக்கம் முடிவுறாமல் நீடிக்கும்

சென்னையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 700-ஐ நெருங்கி வருகிறது. நேற்று (ஏப்.28) ஒரே நாளில் மட்டும் 103 பேர் கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். நோய்த் தொற்று தடுப்பு திட்டத்தின் கீழ் கடந்த 28-ம் தேதி நிலவரப்படி சீல் வைக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 202 ஆக உயர்ந்துள்ளது. அப்பகுதியில் முடக்கப்பட்ட பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகளை நம்பியுள்ளனர்.

சென்னையில் கடந்த மார்ச் முதல் வாரத்தில் தொற்றுக்கு உள்ளான முதல் நபர் கண்டறியப்பட்டார். அன்றிலிருந்து ஏப்ரல் 28-ம் தேதி வரை அடுத்தடுத்து 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலை தடுக்க சென்னை மாநகராட்சியில் "நோய்த் தொற்று தடுப்பு திட்டம்" உருவாக்கப்பட்டு 202 இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தாலும், பிற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இருக்கும் கட்டுப்பாடு மற்றும் தளர்வுகள் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கிடையாது. அவர்கள் தங்கள் வீடுகளை
விட்டு வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மாநகராட்சி மற்றும் போலீஸாரை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம்1 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளன.

ராயபுரம் மண்டலத்தில் அதிகம்

சென்னை மாநகராட்சி 15 மண்டலங் களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ராயபுரம் மண்டலத்தில்தான் பாதிப்பு அதிகம் இங்கு ஏப்.28-ம் தேதி நிலவரப் படி 158 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இம்மண்டலத்தில் 53 இடங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் நிகழ்ந்த 13 உயிரிழப்பு களில் ராயபுரம் பகுதியில் மட்டும் 5 பேர் இறந்துள்ளனர்.

சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் மேற் கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

நோய்த் தொற்றுக்கு உள்ளான நபர் வசிக்கும் தெருவின் அனைத்து வழிகளும் தடுப்புகளைக் கொண்டு அடைத்து, போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு சீல் வைக்கப்படு கிறது. அத்தியாவசிய தேவைகளைத் தவிர எக்காணத்தைக் கொண்டும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அனுமதியில்லை. இந்தக் கட்டுப்பாடு கள், கடைசியாக தொற்று பாதித்த நபரை கண்டறிந்த நாள் முதல் 28 நாட்களுக்கு நீடிக்கும். இவ்வாறு இதுவரை சென்னையில் 202 இடங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி, போலீஸார் உதவி

சீல் வைக்கப்பட்ட பகுதிகளை 24 மணி நேரமும் கண்காணிக்க மாநக ராட்சி மற்றும் காவல்துறை அதிகாரி களைக் கொண்ட குழு அமைக்கப்பட் டுள்ளது. அப்பகுதி மக்கள் தங்களுக்கு தேவைப்படும் மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட் களை இந்தக் குழுவினர் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அரசின் ரூ.1000 நிவாரணம் மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட இலவச பொருட்கள் நியாயவிலைக் கடைகள் மூலமாக மாநகராட்சி உதவியுடன் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதமும் இதே நடைமுறை பின்பற்றப்படும். நடமாடும் காய்கறி மற்றும் மளிகை கடைகள் சீல் வைக்கப் பட்ட பகுதிகளுக்கு வரவழைக்கப்பட்டு, ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

தினமும் ஆய்வு

கரோனா தொற்றுக்கு உள்ளான நபரின் வீட்டைச் சுற்றி உள்ள 2,500 வீடுகளில் தினமும் இருமல், காய்ச்சல், சளி அறிகுறிகள் ஆய்வு செய்யப்படு கின்றன. இப்பணியில் 15 ஆயிரம் மாநக ராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள னர். சந்தேகத்துக்கிடமான நபர்களின் விவரங்கள் இருந்தால் மருத்துவ குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டு, முறையான பரிசோதனைக்குப் பின், தேவைப்பட்டால் அரசு மருத்துவமனை கரோனா வார்டுகளுக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்புகின்றனர்.

நோய்த் தொற்றுக்கு உள்ளான நபரின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது வீட்டு தனிமையில் உள்ளனர். இவர் களுக்கும் தொற்று இல்லை என பரி சோதனை முடிவுகள் வந்தாலும், தனிமையில் இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

இப்பகுதிகளில் தினமும் கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் வசிப்போர் பயன்படுத்தும் முகக்கவசங்கள், கையுறைகள் ஆகியவை மீது பிளீச்சிங் பவுடர் அல்லது சோடியம் ஹைப்போ குளோரைடு கரைசலை தெளித்து மஞ்சள் நிற பைகளில் போட்டு தனியாக வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

எண்ணிக்கை உயர்வது ஏன்?

சென்னையில் நோயாளிகள் அதிகரித்து வருவது குறித்து சென்னை மாநகராட்சி முன்னாள் சுகாதார அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சுமார் 17 ஆயிரம் முதல் 26 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அதனால் நோய் எளிதில் பரவுகிறது. அதுமட்டுமல்லாது, மாநகராட்சியின் வீடு வீடாக சோதனை, 25-க்கும் மேற்பட்ட மாதிரி சேகரிப்பு மையங்களை ஏற்படுத்தி, சந்தேகத்துக்கிடமான நபர்களை உடனுக்குடன் பரிசோதனை செய்தல் என உடனுக்குடன் நோயாளி கள் கண்டறியப்படுகின்றனர். அதனால் எண்ணிக்கை அதிகமாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அதேநேரத்தில், மாநகராட்சி நிர்வாகம் தேவையில்லாத இடங்களில் கிருமிநாசினி தெளித்து மனித ஆற்றலை வீணடிப்பதாலும், விலக்கு அளிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் துறைகளை கண்காணிக்காமல் விட்டதாலும்தான் சென்னையில் நோய்த் தொற்று அதிகமானதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கரோனா கண்காணிப்பு செயலி

சென்னை மாநகராட்சி கரோனா கண்காணிப்பு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியை சென்னை மாநகராட்சி இணையதளத்துக்கு சென்று, அதன் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ள Corona Monitoring App என்ற பகுதியை கிளிக் செய்து, பதிவிறக்கம் செய்யலாம். இதன்மூலம் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு அருகில் சீல் வைக்கப்பட்ட பகுதிகளை தெரிந்துகொள்ளலாம். தங்களுக்கு கரோனா அறிகுறி ஏதேனும் தென்பட்டால், இந்த செயலி மூலமாக செல்ஃபி எடுத்து அனுப்பலாம். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி மருத்துவர்கள் அவர்களை பரிசோதித்து, உரிய சேவையை வழங்குவர். சாதாரண இருமல் இருந்தாலும் இந்த செயலியில் தெரிவிக்கலாம். இந்த விவரங்கள் மாநகராட்சியின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

நமக்கும் பொறுப்பு உண்டு

சென்னையில் 27-ம் தேதி நிலவரப்படி 202 இடங்களில் சீல் வைக்கப்பட்டுள்ளன. அன்று ஒரே நாளில் அம்பத்தூர் மற்றும் ராயபுரம் மண்டலங்களில் தலா 13, திரு.வி.க.நகரில் 9, அண்ணாநகரில் 8, தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், பெருங்குடி மண்டலங்களில் தலா 1 என மொத்தம் 47 புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஏற்கெனவே சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களாக உள்ளனர்.

தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காமல் தொற்றுக்கு உள்ளாவதால், ஏற்கெனவே சீல் வைக்கப்பட்ட பகுதிகளில், கடைசியாக தொற்று ஏற்பட்ட நாளில் இருந்து மேலும் 28 நாட்கள் அங்கு சீல் நீடிக்கும். அதாவது, ஒரு குறிப்பிட்ட பகுதியில் நபர் ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டால், அப்பகுதி முழுவதும் 28 நாட்கள் சீல் வைக்கப்படும். இந்நிலையில், அதே பகுதியில் 27-வது நாளில் மேலும் புதிதாக ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்படும் பட்சத்தில், அன்றிலிருந்து மேலும் 28 நாட்களுக்கு சீல் வைப்பு தொடரும். இதனால் தொற்றுக்கு உள்ளானவர், அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல், அப்பகுதி மக்கள் மொத்த பேரும் முடங்கி கிடக்க வேண்டிய நிலை ஏற்படும். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மேலும் அவதிக்கு உள்ளாகும்.

அதனால் மக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து, அரசு வழங்கும் அறிவுறுத்தல்களை முறையாக கடைபிடித்தால் மட்டுமே நாமும் நம்மால் மற்றவர்களும் பாதிக்கப்படாமல் இருப்பார்கள். கரோனாவை முறியடிக்க வீட்டிலேயே இருப்பதுதான் ஒரே வழி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x