

பொதுமக்கள் பயணம் மேற்கொள் ளும் வகையில் சென்னையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதி சிறப்பாக இருக்கிறது என ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் என்.வி.எஸ்.ரெட்டி பாராட்டு தெரிவித்தார்.
என்.வி.எஸ்.ரெட்டி தலைமை யில் உயர் அதிகாரிகள் 60 பேர் கொண்ட குழுவினர், சென்னை மெட்ரோ ரயில் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்த நேற்று வந்தனர். முன்னதாக கோயம்பேட் டில் உள்ள மெட்ரோ நிறுவன தலைமை அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர், மெட்ரோ ரயில் பணிமனையை பார்வையிட்டனர்.கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.
இது தொடர்பாக நிருபர்களிடம் என்.வி.எஸ் ரெட்டி கூறியதாவது:
ஹைதராபாத்தில் தனியார் பங்களிப்புடன் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 55 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் டெல்லி, பெங்களூர், சென்னை ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள், இயக்கம், சேவைகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். அதனடிப்படையில், ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் சில புதுமைகளை சேர்க்க உள்ளோம்.
சென்னையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதி சிறப்பாக இருக்கிறது. இப்படி இருந்தால்தான் பொதுமக்கள் பொது போக்குவரத்தை பெரிதும் பயன்படுத்துவர். இதன்மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும்.
இவ்வாறு ரெட்டி கூறினார்.