

கரோனா தொற்றால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.
அரியலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு கரோனா தொற்று இருந்த நிலையில் இதுவரை 4 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள இருவர் திருச்சியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் உள்ள ஒரு மாலில் வேலை பார்த்துவந்த 25 வயதுப் பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதியானதால், அரியலூர் மாவட்டம் கரோனா தொற்று பட்டியலில் கடந்த பிப்ரவரி மாதம் இடம் பிடித்தது. அதனையடுத்து, டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்த 5 பேரில் 42 வயதுடைய ஒருவருக்கு தொற்று உறுதியானதால் அரியலூர் மாவட்டம் கரோனா தொற்றால் பாதிகப்பட்ட 2 பேர் கொண்ட மாவட்டமாக ஆனது. இதனையடுத்து, மாவட்டம் முழுவதும் கண்காணிப்பை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தீவிரப்படுத்தியது.
தொடர்ந்து, டெல்லி சென்று வந்த 5 பேரின் உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் எனப் பலரிடம் மருத்துவத் துறையினர் ரத்த மாதிரிகளை சேகரித்தனர். இதில், டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்த தொற்று இல்லாத நபரின் மருந்தகத்தில் வேலை பார்த்த 24 மற்றும் 52 வயதுடைய பெண்கள் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதையடுத்து இருவரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மருத்துவக் குழுவினர் அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், அரியலூரில் சிகிச்சை பெற்று வந்த சென்னையில் பணிபுரிந்த 25 வயதுப் பெண் மற்றும் திருச்சியில் சிகிச்சை பெற்று வந்த 42 வயது ஆண் இருவரும் பூரண குணமடைந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே மருந்தகத்தில் வேலை பார்த்த பெண்களின் உறவினர்கள், அக்கம்பக்கத்தினரை மருத்துவர்கள் ரத்த மாதிரி எடுத்து சோதனை செய்ததில் ராயம்புரம் கிராமத்தைச் சேர்ந்த 12 மற்றும் 36 வயது ஆண்கள் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, ராயம்புரம் கிராமமே தனிமைப்படுத்தப்பட்டு காவல்துறை மற்றும் மருத்துவர்களின் முழு கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், மெடிக்கலில் வேலை பார்த்த பெண்கள் இருவரும் பூரண குணமடைந்ததால், இன்று (ஏப்.28) திருச்சி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், இவர்கள் இருவரும் 14 நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பர்.
தற்போது வரை அரியலூர் மாவட்டத்தில் 6 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் மட்டும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, அரியலூர் மாவட்டத்தை கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் த.ரத்னா, மாவட்ட எஸ்.பி. ஆர்.ஸ்ரீனிவாசன் உட்பட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் எனப் பலரும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
அதேபோல், மாவட்டத்தில் உள்ள ஏழை,எளிய மக்கள் உணவு இல்லாமல் கஷ்டப்படக் கூடாது என சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள் அரிசி, காய்கறிகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக அரியலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று இல்லாத நிலையில், திருச்சியில் சிகிச்சை பெற்று வரும் இருவரும் குணமடைந்து வீடு திரும்பினால் அரியலூர் மாவட்டம் தொற்று இல்லாத மாவட்டமாக மாறும்.