நில உரிமையாளர்களுக்குத் தெரியாமல் சாராய ஊறல்: பொதுமுடக்கத்துக்கு இடையே புதுப் பிரச்சினை

கோவை மாங்கரையில் பிடிபட்ட சாராய ஊறல்.
கோவை மாங்கரையில் பிடிபட்ட சாராய ஊறல்.
Updated on
2 min read

பொதுமுடக்கத்தால் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருப்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், கள்ள மது விற்பனையும் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் நிலத்தின் உரிமையாளர்களுக்கே தெரியாமல், அங்கே பணியாற்றும் பண்ணைக் கூலிகள் சாராய ஊறல் போடும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன.

கோவைக்கு மேற்கே, பெரிய தடாகம், சின்னத்தடாகம், வீரபாண்டி, மாங்கரை, அனுவாவி சுப்பிரமணியர் கோவில் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கே ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளன. அவற்றில் தென் மாவட்டங்களிலிருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் வந்த ஆயிரக்கணக்கானோர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

இங்குள்ள விவசாயத் தோட்டங்களிலும், தென்னை, வாழைத் தோப்புகளிலும் பண்ணைக்கூலிகள் குடும்பம் குடும்பமாகத் தங்கி வேலை பார்த்துவருகின்றனர். இந்த நிலங்களின் உரிமையாளர்கள் பெரும்பாலும் கோவை மாநகரப் பகுதிகளிலேயே வசிக்கின்றனர். தினசரியோ, வாரம் ஒரு முறையோ, மாதம் ஒரு முறையோதான் அவர்கள் இங்கே வந்து விளைச்சலைப் பார்த்துச் செல்கிறார்கள்.

இப்போது கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாய் நிலத்தின் உரிமையாளர்கள் இங்கே வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதை வசதியாகப் பயன்படுத்திக்கொண்ட கூலித் தொழிலாளர்கள் சிலர், தாங்கள் பணிபுரியும் தோட்டத்திலோ, அக்கம்பக்கம் உள்ள பள்ளத்திலோ சாராய ஊறல்களைப் போட்டுள்ளார்கள். அதில் காய்ச்சப்படும் சாராயத்தைத் தங்கள் உபயோகத்திற்குப் பயன்படுத்துவதோடு வெளியாட்களுக்கும் விலைக்கு விற்பதாகத் தெரியவந்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு வீரபாண்டி பகுதியில் ஒரு தோட்டத்தில் சாராயம் ஊறல் போட்டிருப்பதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கே பழைய கழிப்பிடக் கட்டிடம் ஒன்றில் 50 லிட்டர் சாராயம் ஊறல் பதுக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்து அழித்தது போலீஸ். இது தொடர்பாக இப்பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதேபோல, நேற்று மாங்கரை கிராமத்தில் ஒரு தோட்டத்திலும் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டது. அதைக் கைப்பற்றி அழித்த போலீஸார், மருதாசலம் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிடிபடுபவர்களில் பெரும்பாலானோர் பண்ணைக்கூலிகள். இதையடுத்து போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். தவிர இப்படியான பண்ணைத் தோட்ட முதலாளிகள் எச்சரிக்கையாக இருக்கும்படி வருவாய்த் துறை ஊழியர்கள் மூலம் ஊருக்குள் அறிவிப்பும் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் பேசும்போது, “இப்போதைக்கு ரெண்டு மூணு இடங்களில் 50, 60 லிட்டர் சாராய ஊறல்களைக் கண்டுபிடித்து அழித்துள்ளனர் போலீஸார். நில உடமையாளர்கள் இல்லாதபோது இது மாதிரியான சமூக விரோதச் செயல்கள் ஆங்காங்கே நடப்பது இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் நில உடமையாளர்களுக்கும் பிரச்சினை வர வாய்ப்புள்ளது. எனவேதான் உரியவர்களைக் கண்டுபிடித்து எச்சரிக்கை செய்கிறோம். இது இங்கே மட்டும் நடக்க வாய்ப்பில்லை. இன்னமும் பல ஊர்களில், பல மாவட்டங்களிலும் நடப்பதற்கு வாய்ப்புண்டு” என்றார்.

இதற்கு முன்னர் பல முறை கள்ளச்சாராய சாவுகளைத் தமிழகம் சந்தித்திருக்கும் நிலையில், நெருக்கடியான இந்தத் தருணத்திலும் அப்படியான சூழல் உருவாக அரசு இடமளித்துவிடக் கூடாது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in