

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கவில்லை, தொடர் பணி நீட்டிப்பு குறித்த அறிவிப்பும் இல்லாததால், அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இறுதியாண்டு தேர்ச்சி பெறுவோர், ஓராண்டுக்கு பயிற்சி மருத்துவர்களாக பணிபுரிய வேண்டும். அதன்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2014-ம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தவர்கள் கடந்த மார்ச் 28-ம் தேதியுடன் தங்களது பயிற்சியை நிறைவு செய்தனர்.
இந்நிலையில் கோவிட்-19 காய்ச்சலால், அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் பயிற்சி மருத்துவர்களுக்கு ஒரு மாத காலம் கட்டாயப் பணி நீட்டிப்பு செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்கள் தொடர்ந்து பணி செய்து வந்தனர். ஒரு மாதம் முடிந்தநிலையில், தொடர்ந்து பணி நீட்டிப்பு குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. மேலும் அவர்களுக்கு மார்ச் மாதத்திற்குரிய உதவித்தொகையும் வழங்கவில்லை.
ஏற்கெனவே விடுதியில் இடப்பற்றாக்குறையால் தவித்து வரும் அவர்களுக்கு, உதவித்தொகையும் வழங்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பணி நீட்டிப்பு செய்யாவிட்டால் தங்களை விடுவிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘பணி நீட்டிப்பு குறித்து அரசு தான் அறிவிக்க வேண்டும். உதவித்தொகை விரைவில் வழங்கப்படும்,’ என்று கூறினர்.