Published : 28 Apr 2020 05:13 PM
Last Updated : 28 Apr 2020 05:13 PM

வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் தாயகம் திரும்ப உதவிடுக: தமிழக அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் தாயகம் திரும்ப உதவிட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஸ்டாலின் இன்று (ஏப்.28) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா பேரிடர் காலத்தில் மக்களின் துயர் துடைக்கும் வகையில், திமுக மேற்கொள்ளும் பணிகள் குறித்து காணொலி வாயிலாக நாள்தோறும் உரையாடி வருகிறேன். திமுகவின் நிர்வாகிகள், மருத்துவர்கள், தொழில்துறையினர், வணிகர்கள், பொதுமக்கள் எனப் பலருடனும் தொடர்ந்து உரையாடி, அவர்களின் நிலையைக் கேட்டறிந்து ஆக்கபூர்வமான நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது திமுக. இதற்காக, 'ஒன்றிணைவோம் வா' என்ற செயல்திட்டமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் தவிக்கும் தமிழர்களின் நலனிலும் அக்கறை செலுத்தி வருகிறது திமுக. அதன் தொடர்ச்சியாக, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நிலை அறிந்திட இன்று வளைகுடா நாடுகளைச் சேர்ந்த தமிழர்களுடன் காணொலியில் உரையாடினேன்.

வளைகுடா நாடுகள் மற்றும் பிற வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் பலர் தாயகம் திரும்பிட விரும்புகிறார்கள் என்பது இந்தக் காணொலி உரையாடலின் வாயிலாகத் தெரியவந்தது. விமானச் சேவைகள் ரத்து, விசா உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்களால் அயலகங்களில் தவிக்கும் தமிழர்களைத் தாய்த் தமிழகம் அழைத்துவர மத்திய, மாநில அரசுகள் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் நியாயமான கோரிக்கையாக உள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களைத் தாயகம் அழைத்து வருவது குறித்து ஏற்கெனவே மத்திய கேபினட் செயலாளர், மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதி, தாயகம் திரும்புகிறவர்களுக்கான உரிய ஏற்பாடுகள் குறித்துக் கேட்டிருக்கிறார்.

கேரள மாநில அரசு சார்பில் விருப்பத்தைப் பதிவு செய்ய இணையதளம் தொடங்கப்பட்டது. 12 மணிநேரத்தில் வெளிநாடு வாழ் கேரளத்தினர் 1 லட்சம் பேர் அதில் பதிவு செய்துள்ளனர். அத்துடன், கேரள அரசு சார்பில் விமான நிலையங்களில் போதிய ஏற்பாடுகள், விமான நிலையத்திலேயே பரிசோதனை, வீடு அல்லது மருத்துவக் கண்காணிப்பில் வைக்கும் திட்டங்கள், தனியார் மருத்துவமனைகள், ஹோட்டல்கள், படகு வீடுகள் தயார் நிலை உள்ளிட்டவற்றை கேபினட் செயலாளரிடம் தெரிவித்து, ஒப்புதலையும் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது கேரள அரசு.

தமிழக அரசும் விரைந்து செயல்பட்டு, இணையதளம் மூலமாகப் பதிவினைத் தொடங்கி, மத்திய அரசின் அனுமதியுடன் தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்களை அழைத்து வருவதற்கும், மருத்துவ ரீதியாகக் கண்காணிப்பதற்கும் உரிய ஏற்பாடுகளை விரைந்து செய்திடுக என வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x