ஓசூரில் ஊரடங்கு விதிமுறைகளுக்கு மாறாகத் திறக்கப்பட்ட தொழிற்சாலைக்கு சீல்: கோட்டாட்சியர் நடவடிக்கை

ஓசூர் சானசந்திரம் பகுதியில் சட்டவிரோதமாக திறக்கப்பட்ட தொழிற்சாலைக்கு போலீஸார் உதவியுடன் சீல் வைத்த வட்டாட்சியர் மற்றும் வருவாய்த் துறையினர்.
ஓசூர் சானசந்திரம் பகுதியில் சட்டவிரோதமாக திறக்கப்பட்ட தொழிற்சாலைக்கு போலீஸார் உதவியுடன் சீல் வைத்த வட்டாட்சியர் மற்றும் வருவாய்த் துறையினர்.
Updated on
1 min read

ஓசூர் வட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் சட்டவிரோதமாகத் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்த தொழிற்சாலைக்கு சீல் வைத்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஓசூர் சானசந்திரம் பகுதியில் மஞ்சுநாத் என்பவர் பெரு நிறுவனங்களுக்குத் தேவையான உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் சிறு, குறு அளவிலான தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இங்கு 15 பேர் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிற்சாலை ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் 25-ம் தேதி முதல் மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கு மற்றும் 144 தடைச் சட்டம் அமலில் உள்ள நிலையில், இத்தொழிற்சாலை சட்ட விரோதமாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும், வெளி மாவட்டத்தில் இருந்து ஆட்கள் பணிக்கு வந்துள்ளதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்துக்குத் தகவல் அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் ஓசூர் கோட்டாட்சியர் குமரேசன் உத்தரவின்படி, வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் சானசந்திரம் பகுதியில் திறக்கப்பட்டிருந்த தொழிற்சாலைக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் ஊரடங்கு விதிமுறைகளுக்கு மாறாகத் திறக்கப்பட்ட தொழிற்சாலையில் பணியில் இருந்தவர்கள் சமூக இடைவெளியின்றி வேலை செய்வதும் மேலும் தகவல் தெரிவிக்காமல் வெளி மாவட்ட ஆட்கள் சிலர் பணியில் இருந்ததும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் உதவியுடன் வட்டாட்சியர் வெங்கடேசன் மற்றும் வருவாய்த் துறையினர் தொழிற்சாலைக் கதவை பூட்டி சீல் வைத்தனர். மேலும் தொழிற்சாலை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in