25 பேர் குணமடைந்தனர்; கரோனா பாதிப்பில் இருந்து விடுபடுகிறது தூத்துக்குடி- ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே சிகிச்சை

தூத்துக்குடியில் கரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள்.
தூத்துக்குடியில் கரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள்.
Updated on
1 min read

தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பசுவந்தனை பகுதியைச் சேர்ந்த ஒரே ஒரு பெண் மட்டுமே கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இனிமேல் புதிய தொற்று ஏதும் ஏற்படவில்லை எனில் தூத்துக்குடி மாவட்டம் கரோனா தொற்றில் இருந்து முழுமையாக விடுபடும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 27 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இவர்கள், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில், தூத்துக்குடியில் சிகிச்சை பெற்று வந்த ஒரு மூதாட்டி கடந்த 10-ம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பெற்றவர்கள் படிப்படியாக குணமடைந்து வீடு திரும்பினர். தூத்துக்குடியில் சிகிச்சை பெற்று வந்த 20 பேரும், திருநெல்வேலியில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரும் என 25 பேர் கடந்த ஒரு வாரத்தில் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பசுவந்தனை பகுதியைச் சேர்ந்த ஒரே ஒரு பெண் மட்டுமே கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

மாவட்டத்தில் கடைசியாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் இந்த பெண் தான். இவருக்கு கடந்த 20-ம் தேதி கரோனா தொற்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.

அதன் பிறகு கடந்த 10 நாட்களாக மாவட்டத்தில் புதிதாக கரோனா தொற்று யாருக்கும் இல்லை. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை பொறுத்தவரை இம்மாதம் 12-ம் தேதிக்கு பிறகு புதிய தொற்று ஏதும் இல்லை.

இருப்பினும் தொடர்ந்து சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் சராசரியாக 70 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வந்த போதிலும் புதிய தொற்று ஏதும் இல்லாமல் இருந்து வருகிறது.

தற்போது சிகிச்சை பெற்று வரும் ஒரே பெண்ணும் அடுத்த ஓரிரு தினங்களில் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இனிமேல் புதிய தொற்று ஏதும் ஏற்படவில்லை எனில் தூத்துக்குடி மாவட்டம் கரோனா தொற்றில் இருந்து முழுமையாக விடுபடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in