

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து தினமும் வீடு திரும்புவதால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 55 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் ஏற்கெனவே வெவ்வேறு தினங்கக்ளில் 24 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த நான்கு பேர், அம்மாபேட்டையைச் சேர்ந்த மூவர், வல்லத்தைச் சேர்ந்த இருவர் என 4 பெண்கள் உள்பட 9 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து இன்று (ஏப்.28) வீடு திரும்பினர்.
இவர்களுக்கு கரோனா தடுப்புக் கண்காணிப்பு அலுவலர் எம்.எஸ்.சண்முகம், மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ், மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜ் மற்றும் மருத்துவர்கள் சான்றிதழ், பழங்களைக் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். இதன் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் 22 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் கரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் தங்கவைத்து தனிமைப்படுத்தி வந்தனர். அங்கிருந்தவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனை தொற்று இல்லை என உறுதியானதால், அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். இதனால் செங்கிப்பட்டி கல்லூரியில் தற்போது ஒருவர் கூட கரோனா பாதிப்புடன் இல்லை.
இதுகுறித்து கரோனா தடுப்புக் கண்காணிப்பு அலுவலர் எம்.எஸ்.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"தஞ்சாவூர் மாவட்டத்தில் 55 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருத்துவமனையில் உரிய கண்காணிப்பும் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 33 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 22 பேர் மருத்துவமனையில் உள்ளனர். அவர்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 5 தினங்களாகவும், நாகை மாவட்டத்தில் கடந்த 7 நாட்களாகவும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ள எந்த ஒரு நபரும் கண்டறியப்படவில்லை. பொதுமக்கள் சமூக விலகலைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவது வரவேற்கத்தக்கது. இதனால்தான் புதிதாக யாருக்கும் கரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை. இந்த சமூக விலகலை வருங்காலத்திலும் பின்பற்றி, கரோனா தொற்று இல்லாத மாவட்டங்களாக டெல்டா மாவட்டங்கள் விரைவில் வர வேண்டும்".
இவ்வாறு எம்.எஸ்.சண்முகம் தெரிவித்தார்.