

ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கைப் பணிகளை கோவை மேற்கு மண்டல ஐஜி நேரில் பார்வையிட்டார்.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. அந்த வகையில், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள தமிழக நகரமான ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கைப் பணிகளை கோவை மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா நேரில் பார்வையிட்டார்.
அங்கு ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் கூறியதுடன், பணியில் இருந்த காவலர்களுக்கு முகக்கவசம் மற்றும் கையுறைகளை வழங்கினார்.
பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
''கோவை மண்டலத்தில் 274 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, அதில் 204 பேர் குணமடைந்துள்ளனர். 70 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள். கோவை மண்டலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 60 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 40 ஆயிரம் வழக்குகள் இருசக்கர வாகன வழக்குகளாகும். 3 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் சென்றதாக 3 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியதாக 36 வழக்குகள் பதிவாகியுள்ளன. அரசு கூறுவதை ஏற்று வீட்டில் தனித்திருந்தால் கரோனா வைரஸை ஒழிக்க முடியும். கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸார் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள்''.
இவ்வாறு கோவை மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா கூறினார்.
ஆய்வுப்பணியின்போது சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. பண்டிகங்காதர், ஓசூர் டிஎஸ்பி சங்கு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.